சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்

படி;படை;பயன்படு

சனி, 13 ஏப்ரல், 2013

சாதிக்க விரும்பும் சாதனை


சாதிக்க விரும்பும் சாதனை 


"சொலல்வலன் சோர்விலன் அஞ்சான் அவனை 
இகல்வெல்லல்  யார்க்கும் அரிது "என்பது வள்ளுவர் வாய்மொழி .இந்த உலகில் ஒலி தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்து மொழி தோன்றியது .மொழியே எண்ணங்களை,கருத்துகளை,தொடர்பை வெளிப்படுத்தும் கருவியாகும்.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
 இனிதாவது எங்கும் காணோம் "என்பார் பாரதி.என் வாழ்நாள் பயனாக நான் கருதுவது தமிழை எனது தாய்மொழியாகக் கொண்டதே ஆகும்.எனது மொழி இன்பத்தமிழ் மொழி.கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாதவரையும் தன் பக்கம் ஈர்க்கும் மொழி நம் தமிழ் மொழி .எண்ணற்ற இலக்கண,இலக்கிய வளமுடைய உயர்தனிச் செம்மொழி .என் மொழியில் உள்ள கருத்துக்கள் ஏராளம் ஏராளம் .அதனைப் படித்து படித்தவர்க்கும்,பாமரர்க்கும் செம்மாந்த செய்திகளைக் கூறும் பணியை நான் விரும்புகிறேன்.எதிர்காலத்தில் ஒரு சிறந்த பேச்சாளராகி ,வாய்ப்புறத்  தேனை ஊர்புறத்  தருவேன்.இன்றளவும் கொலை,கொள்ளை,கடத்தல்,கற்பழிப்பு போன்ற சமூக விரோதச் செயல்கள் நடை பெறக் காரணம் நமது நாட்டில் இளைஞர்களுக்கு சமூக அக்கறை,மனிதநேயம் ,வாழ்வியல் முறைகள் தெரியவில்லை. நமகென்ன வந்தது? நாமுண்டு  நம் வீடுண்டு என்றும் ,நமக்கெதற்கு  ஊரைத் திருத்தும் வேலை  என்றும் இருப்பதனால் எடுத்துச் சொல்கின்ற அக்கறை நம்மில் பலருக்கும் குறைந்து விட்டது.இத்தகைய மக்களைத் திருத்தும் பணி காவலருக்கு மட்டுமல்ல ஒரு பேச்சாளருக்கும் உண்டு .ஒரு ஆறடி உயரமுள்ள மனிதனை நான்கு அங்குல நாக்கு கொன்று விடும் என்பது பேச்சின் அருமை. உலகில், வாயில் கூழாங் கற்களைப் போட்டுப் பேசப் பழகிய திக்குவாய் டெமாஷ்தனிஷின் சொற்பொழிவுகள் தான் இன்றைய கிரேக்கத்தின் உயர்ந்த செவ்வியல் இலக்கியங்களாகும்.சிசரோ [CICERO ],செலஷ்ட் [sallust],டேசிட்டஷ் [tacitus ] ஆகியோர்களின் சொற்பொழிவுகள் தான் கி.மு.70 முதல் கி.பி.18 வரை இலத்தின் இலக்கியத்தின் பொற்காலமாக இருக்கிறது.பாரசீகத்தில பிர்தௌசியின் பேச்சும் ;சீனத்தில் கன்பூசியஷின் பேச்சும் வரலாற்றை மாற்றவில்லையா? இயேசுவின் மலைப் பிரசங்கம் கூட மக்களை மாற்றிய மகத்தான பேச்சுதான். 

''ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் 
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு ''
    என்ற செய்தி பேச்சு நஞ்சையும் தரவல்லது நாட்டையும் திருத்த வல்லது என்பதற்கு சான்றாகும்.மொழியே நமக்கு கிடைத்த விழி!நமது மக்களுக்கு பாதை காட்டும் கலங்கரை விளக்கமாக;வாழ்வியல் நெறிகளை எடுத்துச் சொல்கின்ற ஒரு பேச்சாளராகவே எனது விருப்பம்.படிப்பது திருவாசகம் இடிப்பது சிவன் கோவில் என்று கல்வியைக் கற்று பயனற்ற  வாழ்வை வாழ்வதை விட மக்களைத் திருத்தும் சர்ச்சில் போலவோ லெனின் ,ரூசோ போலவோ சிறந்த பேச்சாளராவதே நான் சாதிக்க விரும்பும் சாதனையாகக் கொள்கிறேன் .

பேச்சு புரட்சி உலகின் மூச்சு;அறிவின் உரை வீச்சு.கபிலன் முதல் கலாம் வரை பேசியதெல்லாம் பேச்சு தான்.அறிவின் உரை வீச்சு தான்.புரட்சி உலகின் மூச்சு தான்.
"ஊருக்கு நல்லது சொல்வேன் எனக்கு 
உண்மை தெரிந்து சொல்வேன் " என்பதே எனது வாழ்க்கை அதுவே நான் சாதிக்க விரும்பும்  சாதனை.நன்றி.!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக