சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்

படி;படை;பயன்படு

புதன், 28 டிசம்பர், 2011

தமிழ் மொழியின் சிறப்புகள்...!


1) அந்தமிழ்:- அம் + தமிழ் = அழகிய தமிழ்

2) அருந்தமிழ்:- அருமை + தமிழ் = அருமைபாடுடைய தமிழ்

3) அழகுதமிழ்:- எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ்

4) அமுதத்தமிழ்:- அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ்

... 5) அணித்தமிழ்:- அணிநலன்கள் அமைந்த தமிழ், தமிழினம் பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ்

6) அன்னைத்தமிழ்:- நம் அன்னையாகவும் மொழிகளுக்கெல்லாம் அன்னையாகவும் விளங்கும் தமிழ்

7) இசைத்தமிழ்:- முத்தமிழில் ஒரு பிரிவு (இசை மொழியின் கூறாவது ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு)

8) இயற்றமிழ்:- முத்தமிழின் மற்றொரு பிரிவு. ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும் அறிவுநூல்கள் அடங்கியது

9) இன்றமிழ்:- இனிக்கும் தமிழ் (ஒலிக்க, உரைக்க, சிந்திக்க, செவிமடுக்க, எழுத, இசைக்க என எதற்கும் இனியது)

10) இன்பத் தமிழ்:- இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும் இலக்கண இலக்கிய மரபும் கொண்டு, கற்பவர்க்கு எஞ்ஞான்றும் இன்பம் பயப்பது.

11) எந்தமிழ்:- எம் + தமிழ் (கால்டுவெல், போப்பு போன்ற பிறமொழிச் சான்றோரும், கற்றதும் 'எந்தமிழ்' என்று பெருமித உரிமை பாராட்டும் தமிழ்)

12) உகக்குந்தமிழ்:- மகிழ்ச்சியளிக்கும் தமிழ்

13) ஒண்டமிழ்:- ஒண்மை + தமிழ் (அறிவின் செறிவும் நுட்பமும் கொண்டு ஒளிதரும் தமிழ்)

14) கனித்தமிழ்:- கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ்

15) கற்கண்டுத்தமிழ்:- கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச் சுவைக்கக் கரைந்து இனிமை தருவது போல, அடர்ந்து செறிந்த நிலையிலும் மாந்தமாந்த மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ்

16) கன்னித் தமிழ்:- எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும் இளமைநலம் குன்றாமலும் விளங்கும் தமிழ்

17) சங்கத்தமிழ்:- மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள் அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ்

18) சுடர்தமிழ்:- அறிவுக்கும் உணர்வுக்கும் சுடர்தரும் தமிழ்

19) சுவைத்தமிழ்:- சொற்சுவை, பொருட்சுவை, கலைச்சுவை, கருத்துச்சுவை என எல்லாச் சுவையும் செறிந்தது

20) செந்தமிழ்:- செம்மை + தமிழ் = எல்லா வகையிலும் செம்மை உடையது (செந்தமிழ் தகைமையால் அன்றே செந்தமிழ் எனப்பட்டது தமிழ்)

21) செழுந்தமிழ்:- செழுமை + தமிழ் - வளம் குன்றாத தமிழ்

22) தனித்தமிழ்:- தன்னேரிலாத தனித்தன்மை வாய்ந்த தமிழ்

23) தண்டமிழ்:- தண்மை + தமிழ் - குளிர்ச்சி நிறைந்தது

24) தாய்த்தமிழ்:- தமிழினத்தின் தாயாகவும் மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் மூலமாகவும் விளங்கும் தமிழ்

25) தீந்தமிழ்:- (தேன் > தேம் > தீம்) இனிமை நிறைந்த தமிழ்

26) தெய்வத்தமிழ்:- தெய்வத்தன்மை வாய்ந்தது

27) தேன்தமிழ்:- நாவுக்கும் செவிக்கும் சிந்தைக்கும் இனிமை பயக்கும் தமிழ்

28) பசுந்தமிழ்:- பசுமை + தமிழ் – என்றும் தொடந்து செழித்து வளரும் தமிழ்

29) பைந்தமிழ்:- பைம்மை + தமிழ் (பசுமை > பைம்மை)

30) பழந்தமிழ்:- பழமையும் தொடக்கமும் அறியாத தொன்மையுடைய தமிழ்

31) பாற்றமிழ்:- பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும் சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது

32) பாகுதமிழ்:- வெம்மையிலும் வெல்லம் உருகிப் பாகாகி மிகுசுவை தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது

33) நற்றமிழ்:- நன்மை + தமிழ் – இனிய, எளிய முறையில் எழுதவும் கற்கவும் பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத் துணைபுரிவது

34) நாடகத்தமிழ்:- முத்தமிழுள் ஒன்று – நாடகத்தின் மெய்ப்பாடுகளை நுட்பமாய் உணர்த்தும் சொல்வளமும் பொருள்வளமும் ஒலிநயமும் நிறைந்தது

35) மாத்தமிழ்:- மா – பெரிய – பெருமைமிக்க தமிழ் (மங்கலப் பொருளுணர்த்தும் உரிச்சொல் மா)

36) முத்தமிழ்:- இயல், இசை, நாடகம் என முத்திறம் கொண்டு அமைந்த தமிழ்

37) வண்டமிழ்:- வண்மை + தமிழ் (வளஞ்செறிந்த தமிழ்)

38) வளர்தமிழ்:- காலந்தொறும் வளர்ந்துகொண்டே வரும் தமிழ்

நன்றி --தமிழ் குழுமம் 

நீங்கள் விரும்பினால்…



————————————
உங்கள் விருப்பத்திற்கு வாழ்க்கையை வளைக்கலாம். 
உங்கள் கனவுகளை உண்மையென ஆக்கலாம்.
உங்கள் உறுதியினால் சிரமங்களைக் கடக்கலாம். 
உங்கள் எல்லைகளை நீங்களே உடைக்கலாம். 
தடைகளைச் சீர்செய்து தடமாக மாற்றலாம். 
வீழ்ச்சிகளைத் தடுத்து வெற்றிகளை ஈட்டலாம். 
வீணாகும் நேரத்தைப் பயனுள்ளதாக்கலாம்.
வேண்டாத பழக்கங்களை வினாடிக்குள் நீக்கலாம். 
பகைவர்களை மிக நல்ல நண்பர்களாக மாற்றலாம். 
பழைய தோல்விகளின் பாரங்கள் நீங்கலாம். 
எத்தனை இழந்தாலும் இழந்த பொருள் மீட்கலாம். 
என்றைக்கு இருந்தாலும் எண்ணியதை எட்டலாம். 
கேள்விகளுக்குப் பதில்கள் உங்களிடமே கிடைக்கலாம். 
கேள்விகளுக்குப் பதில் சொல்ல சாதனைகள் படைக்கலாம். 
தேவைகள் பெருகும்போது வரவுகளும் பெருக்கலாம். 
வியர்வை செலவழித்து வெற்றிகள் குவிக்கலாம். 
மௌனத்தைப் பதிலாக்கி விமர்சனங்களை வீழ்த்தலாம். 
குழப்பங்களை இல்லாமல் செயல்திட்டம் வகுக்கலாம். 
கவனத்தைக் குவிப்பதனால் காரியத்தில் வெல்லலாம். 
வெற்றியிலே தேங்காமல் அடுத்த செயல் ஆற்றலாம். 
விவாதங்கள் ஒவ்வொன்றும் தீர்வு நோக்கிச் செல்லலாம். 
முடக்கவரும் எதிர்ப்புகளை முன்கூட்டித் தடுக்கலாம்.
மாற்றங்கள் ஏற்பதனால் ஆதாயம் காணலாம்.
ஏமாற்றம் வந்தாலும் தொட்டதைத் தொடரலாம்.
“ஒரு கப் உற்சாகம்”
‘மரபின் மைந்தன்’ ம.முத்தையா 
விஜயா பதிப்பகம், கோவை 
விலை: ரூபாய் முப்பது மட்டும்.

திங்கள், 26 செப்டம்பர், 2011

அவ்வை யார்?


Join Only-for-tamil


ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் போன்ற பழமையான தமிழ்ப் பாடல்களை நீங்கள் படித்திருக்கிறீர்கள் இல்லையா? அப்பாடல்களை எழுதியவர் அவ்வையார். அந்தப் பாடல்களை மட்டும் இல்லாமல் மேலும் பல பாடல்களையும் நூல்களையும் பாடியவர் தான் அவ்வையார். அவ்வையார் ஒருவரே அல்லர். பல காலங்களில், தமிழ் நாட்டின் பல பகுதிகளில் சுமார் எட்டு அவ்வைகள் வாழ்ந்ததாக அறிஞர்கள் சொல்கிறார்கள்.

அவ்வை என்றால் அம்மை என்று பொருள். அம்மை என்றதும் ஒரு வகையான நோயின் பெயர் என்று கூட, இக்காலத்தில் உள்ள  சிலர் நினைத்துக் கொள்வார்கள். அம்மை என்றால் அம்மா, அன்னை என்று பொருள். ஆனால் அவ்வை என்ற சொல் கிழவி என்ற பொருளில் தான் இங்கு வழங்குகிறது. அது தவறு.
திருமணம் செய்து கொள்ளாமல், பல நூல்களை கற்று, அறிவு முதிர்ச்சிப் பெற்று சமூகப் பணியோ, சமயப்பணியோ ஆற்றிய பெண்களை அக்காலத்தில் அவ்வை என்று அழைத்து இருக்கிறார்கள். தமிழ் நாட்டின் சில பகுதிகளில் அவ்வை என்ற தெய்வம் கூட இருக்கிறது. இது ஒரு சிறு தெய்வம்.


ஒளவ்வை என்று எழுதுவதும் தவறு என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

"ஒள' என்ற எழுத்தில் தொடங்கி எழுதுவதற்காக ஒரு சொல் வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஒளவ்வை என எழுதப்படுகிறது. "அவ்வை' என்று எழுதுவதே சரி.  பல காலகட்டங்களில் இப்படி வாழ்ந்த அவ்வையார்களில் நான்கு அவ்வையார்களைப் பற்றி ஓரளவிற்கு வரலாறுகள் இருக்கின்றன. ஆனால் அவை கூட சிறிய அளவில்தான் இருக்கின்றன. அவர்கள் பின் வருமாறு :

1. சங்க கால அவ்வை
2. அங்கவை - சங்கவை அவ்வை
3. சோழர் கால அவ்வை
4. பிற்கால அவ்வை

1. சங்ககால அவ்வை 59 பாடல்களைப் பாடி இருக்கிறார். இக்காலம் கி.மு.300 முதல் கி.பி.250 வரையில் உள்ளது. சேரன் மாரி வெண்கோ, பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, சோழன் பெரு நற்கிள்ளி ஆகிய மூவேந்தர்கள் பற்றியும் அதியமான், எழினி, தொண்டைமான், பாரி ஆகிய குறுநில மன்னர்கள் பற்றியும் இவர் பாடலில் குறிப்புகள் உள்ளன. அதியமானிடம் நெல்லிக்கனி பெற்று உண்டது இவர்தான்.
"அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி
குறுகத் தறித்த குறள்'
என்று திருக்குறளை சிறப்பித்து பாடியது இவர்தான். இவர் நெஞ்சுரம் கொண்டவர், மன்னர்களிடமும், மக்களிடமும் பெருமதிப்பும், அறிமுகமும் கொண்டவர் பெண்ணிய சிந்தனை உடையவர் என்று கூறலாம்.

2. அங்கவை - சங்கவை கால அவ்வை வள்ளல் பாரி என்ற குறுநில மன்னன் போரிலே இறந்த பிறகு அவனுடைய மகள்களான அங்கவை சங்கவை ஆகிய இருவருக்கும் இந்த அவ்வை பாதுகாப்பு அளித்துள்ளார். அந்த இரு பெண்களும் தன் தந்தையின் நாட்டைப் பற்றி ‘அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்' என்று பாடி இருக்கிறார்கள்.
இவர்களின் பெயர்கள் தான் 'சிவாஜி' எனும் ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தில் நகைச்சுவையாக இழிவுபடுத்தப்பட்டுள்ளது. அப்பெண்கள் அசிங்கமானவர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கருப்பு நிறம் அசிங்கமானதும் இல்லை.

3. சோழர் கால அவ்வை : இவரின் காலம் 12ஆம் நூற்றாண்டு ஆகும். கொன்றை வேந்தன், ஆத்திச்சூடி, மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களை எழுதியவர் இவர்தான். இந்த அவ்வைகளோடு புராண கருத்துகளும், கதைகளும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. முருகனுக்கு அறிவுரை கூறியவர். அற்புதங்கள் செய்தவர் என்றெல்லாம் இவரைப் பற்றி பல கற்பனைக் கதைகள் உள்ளன. இக்கால அவ்வை எழுதிய ஒரு பாடல் உழவுத் தொழிலைப் போற்றுகிறது.

வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோனுயர்வான்

இந்தச் செய்யுள் தோன்றக் காரணமாக அமைந்த ஒரு சம்பவம் வருமாறு:
சோழ நாட்டு மன்னரின் அரச சபையிலே, புலவர்கள் எல்லோரும் சோழ மன்னரைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். அவ்வையாரின் முறை வந்தது அவர் "வரப்புயர" என்று மட்டும் கூறி விட்டு அமர்ந்தார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அதே நேரம் தங்களது அறியாமையை மற்றவரின் முன் காட்டிக் கொள்ளவும் தயக்கம். ஆகவே எல்லோரும் அமைதியாக சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். மன்னன் கேட்டார் " அவ்வையே! அனைவரும் என்னையே புகழ்ந்து பாடினார்கள் தாங்கள் மட்டும் வரப்புயர என்று சம்பந்தமில்லாமல் வாழ்த்தினீர்கள். இதன் அர்த்தம் என்ன என்று கூற வேண்டும்.
அதற்குத் தான் அவ்வை மேற்கண்ட செய்யுளைப் பாடினார்.
வரப்பு எவ்வளவு உயரமாகக் கட்டுகிறார்களோ, அவ்வளவு உயரத்திற்கேற்றவாறு நெற்கதிர்கள் உயர்ந்து வளரும். நெற்கதிர்கள் நன்கு வளர்ந்தால் விவசாயிகளின் குடும்பங்கள் வாழ்க்கைத் தரத்தில் உயரும். மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாட்டைத் தான் செங்கோல் ஆட்சி நடக்கும் நாடு என்று கூறுவார்கள். ஆட்சி நன்றாக நடந்தால், அந்நாட்டு மன்னனும் நன்றாக வாழ்வான் என்பது தான் இப்பாடலுக்கான பொருள்.

4. பிற்கால அவ்வை : பல தனிப்பாடல்களை பாடிய அவ்வை இவர். இவரோடும் புராணக் கதைகள் பிணைக்கப்பட்டுள்ளன. அவ்வையை ஒரு பக்திப் பெண் எனவும், மந்திர மாயங்கள் செய்தவர் எனவும், இந்துக் கடவுளர்களான சிவன், முருகன் போன்றோரிடம் அருள் பெற்றவர், அவர்களோடுவாழ்ந்தவர் எனவும் பல கற்பனைக் கதைகள் இருக்கின்றன. அவ்வையைப் பற்றி இதைப் போன்ற கருத்துக்களை சொல்லி, திரைப்படங்களும் வந்துள்ளன. இந்த கற்பனைகளை நீங்கள் தள்ளிவிடுங்கள்.

ஆனால் அவ்வை என்பது அழகிய தமிழ்ச்சொல் என்பதையும், அக்காலத்தில் அறிவுடைய பெண்களை இப்படி அழைத்தனர் என்பதையும் நீங்கள் அறிய வேண்டும். கல்வி பெற்று ஆண்களுக்கு இணையாக பொது வாழ்வில் ஈடுபட்டிருந்த பெண் தான் அவ்வை என்பதை உணர வேண்டும்.   


நன்றி ---பிரேமலதா --தமிழ் குழுமம்

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

தமிழகப் பண்டைய அளவை முறைகள்





 
பண்டைய தமிழகத்தில் ஏழு வகையான அளவை முறைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அவை பற்றி பண்டை நிகண்டுகளும் இலக்கிய நூல்களும் பேசுகின்றன. அவை;
1. எண்ணல்
ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணாகவோ வீசம், அரைக்கால், கால் என்ற இலக்கமாகவோ, அல்லது பதாதி சேனாமுகம், குமுதம் எனத் தொகையாகவோ எண்ணிக் கணக்கிடுவது எண்ணல் அளவை ஆகும்.
2. நிறுத்தல்
குன்றிமணி, வராகனெடை, பலம், வீசை, துலாம் என படிக்கல் கொண்டு தராசிலிட்டு நிறுப்பது நிறுத்தல் அளவை ஆகும்.
நிறுத்தல் அளவு
நிறுத்தல் அளவுக்கான தராசு ஆறு வகைப்படும்.
  • மணித்தராசு - இது இரத்தினம் முதலியவற்றை நிறுக்கும் மிகச் சிறிய தராசு
  • பொன் தராசு - தங்கம் போன்றவைகளை நிறுக்கும் சிறு தராசு
  • உலோகத் தராசு - செம்பு, பித்தளை முதலியவற்றை நிறுக்கும் பெருந் தராசு
  • பண்டத் தராசு - பலசரக்குகளை நிறுக்கும் தராசு
  • கட்டைத் தராசு - விறகு அல்லது மூட்டைகளை நிறுக்கும் தராசு. இது இரு புறமும் சதுர மரப்பலகைகளைத் தட்டுக்களாகக் கொண்டிருக்கும்.
  • தூக்கு - காய்கறிகளை நிறுக்கும் தராசு. இது மரக்கம்பாலான துலாக் கோலின் ஒரு பக்கத்தில் மட்டும் தொங்கும் கூடைத் தட்டால் ஆனது.
பொன் முதலியவை நிறுக்கும் அளவு
4 நெல்லெடை = 1 குன்றிமணி
2 குன்றிமணி = 1 மஞ்சாடி
2 மஞ்சாடி = 1 பணவெடை
5 பணவெடை = 1 கழஞ்சு
8 பணவெடை = 1 வராகனெடை
4 கழஞ்சு = 1 கஃசு
4 கஃசு = 1 பலம்
பல்வகைப் பண்டங்கள் நிறுக்கும் அளவு
32 குன்றிமணி = 1 வராகனெடை
10 வராகனெடை = 1 பலம்
40 பலம் = 1 வீசை
100 பலம் = 1 கா
6 வீசை = 1 துலாம்
8 வீசை = 1 மணங்கு
20 மணங்கு = 1 பாரம்
3. முகத்தல்
பால், மோர், நெய் போன்ற நீரியல் பொருளை உழக்கு படிகளால் மொண்டு எடுத்து அளப்பது முகத்தல் அளவை ஆகும்.
முகத்தல் அளவு

5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 படி
8 படி = 1 மரக்கால்
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி
(சில இடங்களில் உரியையும், வேறு சில இடங்களில் படியையும் நாழி என்கிறார்கள்)
4. பெய்தல்
நெல் முதலியவற்றை படி, மரக்கால்களில் சொரிந்து அளப்பது பெய்தல் அளவை ஆகும்.
பெய்தல் அளவு

360 நெல் = 1 செவிடு
5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 படி
8 படி = 1 மரக்கால்
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி
5 மரக்கால் = 1 பறை
80 பறை = 1 கரிசை
48=96 படி = 1 கலம்
120 படி = 1 பொதி
1 படிக்கு
அவரை = 1,800
மிளகு = 12,800
நெல் = 14,400
பயறு = 14,800
அரிசி = 38,000
எள் = 1,15,000
5. நீட்டல்
விரல், சான், முழம் என நீளத்தை கை அல்லது கால்களால் அளப்பது நீட்டல் அளவை ஆகும்.
நீட்டல் அளவு

10 கோண் = 1 நுண்ணணு
10 நுண்ணணு = 1 அணு
8 அணு = 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் = 1 துசும்பு
8 துசும்பு = 1 மயிர்நுனி
8 மயிர்நுனி = 1 நுண்மணல்
8 நுண்மணல் = 1 சிறு கடுகு
8 சிறு கடுகு = 1 எள்
8 எள் = 1 நெல்
8 நெல் = 1 விரல்
12 விரல் = 1 சான்
2 சான் = 1 முழம்
4 முழம் = 1 பாகம்
6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)
4 காதம் = 1 யோசனை
6. தெறித்தல்
நொடி, நாழிகை, நாள் என காலத்தைக் கணிப்பது தெறிப்பு அளவை ஆகும்.
தெறிப்பு அளவு
2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 விநாடி - நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம் (30 நாள்) = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் (12 மாதம்) = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்
சிறுபொழுது
காலை - 6 முதல் 10 மணி வரை
நண்பகல் - 10 முதல் 2 மணி வரை
ஏற்பாடு - 2 முதல் 6 மணி வரை
மாலை - 6 முதல் 10 மணி வரை
இடையாமம் - 10 முதல் 2 மணி வரை
வைகறை - 2 முதல் 6 மணி வரை
பெரும்பொழுது
கார் - ஆவணி, புரட்டாசி
கூதிர் - ஐப்பசி, கார்த்திகை
முன்பனி - மார்கழி, தை
பின்பனி - மாசி, பங்குனி
இளவேனில் - சித்திரை, வைகாசி
முதுவேனில் - ஆனி, ஆடி
7. சார்த்தல்
சுரம், ஒலி, நிறம், உரு முதலியவற்றைக் கூறி “இப்படி”, “அதைப்போல” என்று ஒப்பிட்டு அளப்பது சார்த்தல் அளவை ஆகும்.
நன்றி: முனைவர் தமிழப்பன் எழுதிய “தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும்” எனும் நூலில் அட்டவணைப்பக்கம் 18 முதல் 21 வரையுள்ள சா.கணேசன் எழுதிய “தமிழகத்து அளவை முறை”

தமிழ் எண்களும் அளவுகளும்



உலகம் முழுவதும் பயன்பாட்டிலுள்ள ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளிலும் எண்களும் அளவுகளும் குறிப்பிட்ட அளவுகளுக்கு மேல் பெயரில்லாத நிலையில்தான் இருக்கிறது. ஆனால் தமிழ் மொழியில் அதிக அளவாக எண்களும் அளவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சிறப்பு என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஏறு முக இலக்கங்கள்
  • 1 = ஒன்று -one
  • 10 = பத்து -ten
  • 100 = நூறு -hundred
  • 1000 = ஆயிரம் -thousand
  • 10000 = பத்தாயிரம் -ten thousand
  • 100000 = நூறாயிரம் -hundred thousand
  • 1000000 = பத்துநூறாயிரம் - one million
  • 10000000 = கோடி -ten million
  • 100000000 = அற்புதம் -hundred million
  • 1000000000 = நிகர்புதம் - one billion
  • 10000000000 = கும்பம் -ten billion
  • 100000000000 = கணம் -hundred billion
  • 1000000000000 = கற்பம் -one trillion
  • 10000000000000 = நிகற்பம் -ten trillion
  • 100000000000000 = பதுமம் -hundred trillion
  • 1000000000000000 = சங்கம் -one zillion
  • 10000000000000000 = வெல்லம் -ten zillion
  • 100000000000000000 = அன்னியம் -hundred zillion
  • 1000000000000000000 = அர்த்தம் -?
  • 10000000000000000000 = பரார்த்தம் —?
  • 100000000000000000000 = பூரியம் -?
  • 1000000000000000000000 = முக்கோடி -?
  • 10000000000000000000000 = மஹாயுகம் -?
இறங்கு முக இலக்கங்கள்
  • 1 - ஒன்று
  • 3/4 - முக்கால்
  • 1/2 - அரை கால்
  • 1/4 - கால்
  • 1/5 - நாலுமா
  • 3/16 - மூன்று வீசம்
  • 3/20 - மூன்றுமா
  • 1/8 - அரைக்கால்
  • 1/10 - இருமா
  • 1/16 - மாகாணி (வீசம்)
  • 1/20 - ஒருமா
  • 3/64 - முக்கால் வீசம்
  • 3/80 - முக்காணி
  • 1/32 - அரை வீசம்
  • 1/40 - அரைமா
  • 1/64 - கால் வீசம்
  • 1/80 - காணி
  • 3/320 - அரைக்காணி முந்திரி
  • 1/160 - அரைக்காணி
  • 1/320 - முந்திரி
  • 1/102400 - கீழ் முந்திரி
  • 1/2150400 - இம்மி
  • 1/23654400 - மும்மி
  • 1/165580800 - அணு
  • 1/1490227200 - குணம்
  • 1/7451136000 - பந்தம்
  • 1/44706816000 - பாகம்
  • 1/312947712000 - விந்தம்
  • 1/5320111104000 - நாகவிந்தம்
  • 1/74481555456000 - சிந்தை
  • 1/489631109120000 - கதிர் முனை
  • 1/9585244364800000 - குரல்வளைப்படி
  • 1/575114661888000000 - வெள்ளம்
  • 1/57511466188800000000 - நுண்மணல்
  • 1/2323824530227200000000 - தேர்த்துகள்
அளவைகள்
நீட்டலளவு
  • 10 கோன் - 1 நுண்ணணு
  • 10 நுண்ணணு - 1 அணு
  • 8 அணு - 1 கதிர்த்துகள்
  • 8 கதிர்த்துகள் - 1 துசும்பு
  • 8 துசும்பு - 1 மயிர்நுணி
  • 8 மயிர்நுணி - 1 நுண்மணல்
  • 8 நுண்மணல் - 1 சிறுகடுகு
  • 8 சிறுகடுகு - 1 எள்
  • 8 எள் - 1 நெல்
  • 8 நெல் - 1 விரல்
  • 12 விரல் - 1 சாண்
  • 2 சாண் - 1 முழம்
  • 4 முழம் - 1 பாகம்
  • 6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
  • 4 காதம் - 1 யோசனை
பொன் நிறுத்தல்
  • 4 நெல் எடை - 1 குன்றிமணி
  • 2 குன்றிமணி - 1 மஞ்சாடி
  • 2 மஞ்சாடி - 1 பணவெடை
  • 5 பணவெடை - 1 கழஞ்சு
  • 8 பணவெடை - 1 வராகனெடை
  • 4 கழஞ்சு - 1 கஃசு
  • 4 கஃசு - 1 பலம்
பண்டங்கள் நிறுத்தல்
  • 32 குன்றிமணி - 1 வராகனெடை
  • 10 வராகனெடை - 1 பலம்
  • 40 பலம் - 1 வீசை
  • 6 வீசை - 1 தூலாம்
  • 8 வீசை - 1 மணங்கு
  • 20 மணங்கு - 1 பாரம்
முகத்தல் அளவு
  • 5 செவிடு - 1 ஆழாக்கு
  • 2 ஆழாக்கு - 1 உழக்கு
  • 2 உழக்கு - 1 உரி
  • 2 உரி - 1 படி
  • 8 படி - 1 மரக்கால்
  • 2 குறுணி - 1 பதக்கு
  • 2 பதக்கு - 1 தூணி
பெய்தல் அளவு
  • 300 நெல் - 1 செவிடு
  • 5 செவிடு - 1 ஆழாக்கு
  • 2 ஆழாக்கு - 1 உழக்கு
  • 2 உழக்கு - 1 உரி
  • 2 உரி - 1 படி
  • 8 படி - 1 மரக்கால்
  • 2 குறுணி - 1 பதக்கு
  • 2 பதக்கு - 1 தூணி
  • 5 மரக்கால் - 1 பறை
  • 80 பறை - 1 கரிசை
  • 48 96 படி - 1 கலம்
  • 120 படி - 1 பொதி

    நன்றி --------http://jskpondy.blogspot.com