சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்

படி;படை;பயன்படு

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

புண்ணியம் எது?பாவம் எது?

ஒரு ஊரிலேபத்து விவசாயிகள் இருந்தார்கள்.

ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது.

பயந்துபோன அவர்கள் ஓடிச்சென்று பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஒளிந்து கொண்டனர்.

வெகுநேரமாகியும் மின்னல் மின்னுவதும்  இடி இடிப்பதும் நிற்கவில்லை.  பயத்தால்  நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் 'நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்' என்று சொன்னான்.

மற்றவர்களும்இதனை ஆமோதித்தார்கள்.

இத்தனை பேருக்குள் அந்தப் பாவியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று. அதன்படி  ஒருவொருவரும் தத்தம் தலையிற் கட்டியிருந்த தலைப்பாகையைக் கையிற் பிடித்துக் கொண்டு மழையில் நீட்டுவது என்று முடிவாயிற்று.

அனைவரும் தத்தம் தலைப்பாகையை மழையில் நீட்டினர்.

பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் மின்னியது. அதில் விவசாயி ஒருவரின் தலைப்பாகை மட்டும் எரிந்து சாம்பலாகியது.

மற்றையஒன்பது விவசாயிகளும் "இவன்தான் பாவி. முதலில் இவனின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு" என்று கத்திக் கொண்டே அவன் மேற் பாய்ந்தனர்.

அந்த விவசாயி கெஞ்சிக் கதறித்தான் அப்பாவி என்று மன்றாடினான். மற்றவர்கள்  எவரும் அதைக் காதிற் போட்டுக் கொள்ளவில்லை. அவனின் கழுத்தைப் பிடித்துப் பலவந்தமாக வெளியே தள்ளினர். 

அவன் கதறிக் கொண்டே மழையில் ஒடினான்.

அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் மின்னி இடி இடித்தது. ஒடிக்கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியடைந்து அந்த இடத்திலேயே நின்று விட்டான். சற்று நேரத்தின் பின்  சுயநிலைக்குத் திரும்பிய  அவன் மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தான்.

மண்டபத்தில் இடி விழுந்து, மண்டபம் முழுவதும் நொருங்கிக் கிடந்தது. ஒன்பது விவசாயிகளும் பரிதாபமாக உடல் கருகிச் செத்துப் போயிருந்தனர்.
 
பாவமும் புண்ணியமும் பற்றி வேதாத்திரி மகரிஷி சொல்வது இதுதான் :


Join Only-for-tamil
"நன்மையும் தீமையும் செயல்களில் இல்லை. செய்யும் செயல் என்னென்ன விளைவுகளைத் தருமோ, அந்த விளைவுகளைக் கொண்டு தான் நன்மையும் தீமையுமாகப் பிரித்துப் பார்க்கிறோம். அது நன்மையான விளைவாக இருந்தால்'புண்ணியம்' என்றும், தீமையான விளைவாக இருந்தால் 'பாவம்' என்றும் கூறுகிறோம்.

பசி எடுக்கிறது. உணவு சாப்பிட்டுப் பசியைப் போக்கிக் கொள்கிறோம். ஆனால், நாவுக்குச் சுவையாகவும், நன்றாகவும் இருக்கிறது என்பதற்காக அதிகப்படியாக உண்டால் என்ன ஆகும்? அந்த உண்ட உணவே தீமையை உண்டாக்குகிறது. ஆகவே, செயலில் பாவம்,புண்ணியம் இல்லை. செயல்களின்விளைவுகளைத்தான் கவனிக்க வேண்டும். இதற்கு ஒரு சாம்யம் (Formula) கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது புண்ணியம் எது? பாவம் எது? என்று சிந்திக்க வேண்டும்

புண்ணியம் எது? எண்ணம், சொல், செயல் ஆகிய ஏதொன்றாலும் தனக்கோ, பிறர்க்கோ,தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவிற்கோ,உடலுக்கோ துன்பம் தராது, விழிப்போடு,துன்பங்கள் நீக்கும் வகையில் செய்யப்படும் செயல்கள் யாவும் புண்ணியத்தின் பாற்படும்.

பாவம் எது? ஒருவரது எண்ணம், சொல், செயல் இவைகளினால் எதனாலேனும் தனக்கேனும்,பிறருக்கேனும் அன்றைக்கோ, பிற்காலத்திலோ,உடலுணர்ச்சிக்கோ, பகுத்தறிவுக்கோ துன்பம் விளைவிப்ப தாக இருந்தால் அத்தகைய செயல்கள் பாவம் என்பதாகும்."