சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்

படி;படை;பயன்படு

செவ்வாய், 15 அக்டோபர், 2013

      அன்புள்ள அன்னை         

என் உயிருக்கு உடல் கொடுத்து
உடலுக்கு உயிர் கொடுத்து
 வாழ்வை வடிவமைத்தீர்.

என் எதிர்காலம் செம்மையுற

தன் காலத்தில் பெரும்பங்கைத்
தானம் தந்தீர்.

இருதிரி கொண்ட

மெழுகுத் திரியாய்
உமை மாற்றிக் கொண்டீர்.

கல்வியில் கைகொடுத்து

அறத்தைக் கற்பித்து
மனிதநேயம் வளர்த்தீர்.

தோல்வியில் தேறுதலாகி

வெற்றியின் ஒருகூறாகி
வெளிச்சம் தந்தீர்.

என் விருப்பமே தன் விருப்பமாகி

எனக்குள் வாழ்கிறார் என் தாய்
அவருக்குள் வாழ்கிறேன் நான். 


                               ஆ.  ஏஞ்சலின் பிரியதர்ஷினி  12 அ


சனி, 11 மே, 2013

                     புத்தகம் என்பது 

கவிஞர்  ஈரோடு தமிழன்பன் இருபத்தோராம் நூற்றாண்டு 
வள்ளலார் .அவருடைய ' புத்தகம் என்பது...  'என்ற நூலில் 
இடம்பெற்ற, சில கவிதைகளை உங்கள் பார்வைக்குப் 
பரிமாறுகிறோம் .

"பத்துப்
 பறவைகளோடு பழகி 
 நீங்கள்
 ஒரு பறவையாக முடியாது .
 
 பத்து
 நதிகளோடு பழகி 
 நீங்கள்
 ஒரு நதியாக முடியாது.
 
 பத்துப் 
 புத்தகங்களோடு பழகிப் பாருங்கள்
 நீங்கள்  
 பதினோராவது புத்தகமாகி 
 படிக்கப்படுவீர்கள் ".
 
" புத்தகங்களைத் 
  திற; 
 அவை உன்னைத் 
 திறக்கும் ."

 "சிறந்த புத்தகத்தின் 
 பயன் மனப்பாடம் ஆவதன்று .
 மனத்துக்குப் 
 பாடமாவதுதான்"    
 
 
  

செவ்வாய், 7 மே, 2013

ஆய கலைகள் அறுபத்துநான்கு

ஆய கலைகள் அறுபத்து நான்கையும் 
ஏய உணர்விக்கும் என்னம்மை  
என்றார் குமரகுருபரர் .அறுபத்துநான்கு கலைகளின் 
பட்டியல் இதோ .

1.ஆடல் 
2.இசைக்கருவி மீட்டல்
3.ஒப்பனை செய்தல் 
4.சிற்பம் வடித்தல் 
5.பூத்தொடுத்தல்  
6.சூதாடல்
7.சுரதம் அறிதல் 
8.தேனும் கள்ளும் சேகரித்தல்
9.நரம்பு மருத்துவம்
10.சமைத்தல் 
11.கனி உற்பத்தி செய்தல் 
12.கல்லும் பொன்னும் பிளத்தல் 
13.கரும்பில் வெல்லம் எடுத்தல் 
14.உலோகங்களில் மூலிகை கலத்தல்   
15.கலவை உலோகம் பிரித்தல் 
16.உலோகக் கலவை ஆராய்ந்து அறிதல் 
17.உப்பு உண்டாக்குதல் 
18.வாள் எறிதல் 
19.மற்போர் புரிதல் 
20.அம்பு தொடுத்தல் 
21படை அணிவகுத்தல் 
22.முப்படைகளை முறைப்படுத்தல் 
23.தெய்வங்களை மகிழ்வித்தல் 
24.தேரோட்டல் 
25.மட்கலம் செய்தல் 
26.மரக்கலம் செய்தல் 
27.பொற்கலம் செய்தல் 
28.வெள்ளிக்கலம் செய்தல் 
29.ஓவியம் வரைதல் 
30.நிலச்சமன் செய்தல் 
31.காலக் கருவி செய்தல் 
32.ஆடைக்கு நிறமூட்டல் 
33.எந்திரம் இயற்றல் 
34.தோணி கட்டல்
35.நூல் நூற்றல் 
36.ஆடை நெய்தல் 
37.சாணை பிடித்தல் 
38.பொன்னின் மாற்று அறிதல் 
39.செயற்கைப் பொன் செய்தல் 
40.பொன்னாபரணம் செய்தல் 
41.பொன் முலாமிடுதல் 
42.தோல் பதனிடுதல்
43.மிருகத் தோல் உரித்தல் 
44.பால் கறந்து நெய்யுறுக்கல் 
45.தையல் 
46.நீச்சல் 
47.இல்லத் தூய்மையுறுத்தல் 
48.துவைத்தல் 
49.மயிர் களைதல் 
50.எள்ளில் இறைச்சியில் நெய் எடுத்தல் 
51.உழுதல் 
52.மரம் ஏ றுதல் 
53.பணிவிடை செய்தல் 
54.மூங்கில் முடைதல் 
55.பாத்திரம் வார்த்தல் 
56.நீர் கொணர்தல் நீர் தெளித்தல் 
57.இரும்பாயுதம் செய்தல் 
58.மிருக வாகனங்களுக்கு தவிசு அமைத்தல் 
59.குழந்தை வளர்ப்பு
60.தவறினைத் தண்டித்தல்  
61.பிறமொழி எழுத்தறிவு 
62.வெற்றிலைப் பாக்கு சித்தப்படுத்துதல் 
63.மே ற்கூறிய கலைகளை உள்வாங்கும் விரைவு 
64.வெளிப்படுத்தும் நிதானம் .

[ இவை சுக்கிர நீதி கூறும் அறுபத்து நான்கு கலைகள் ஆகும் ]



  

வெள்ளி, 3 மே, 2013

வசையும் வாழ்த்தும் 


வசை பாடப்படுவது 

இழிந்தது.
வசை பாடுவது 
அதனினும் இழிந்தது. 

புகழப்படுவது 

உயர்ந்தது .
புகழ்வது 
அதனினும் உயர்ந்தது.

அன்பு காட்டப்படுவது 

இனியது .
அன்பு காட்டுவது 
அதனினும் இனியது . 

புறக்கணிக்கப்படுவது 

கொடியது .
புறக்கணிப்பது 
அதனினும் கொடியது .

சனி, 13 ஏப்ரல், 2013

சாதிக்க விரும்பும் சாதனை


சாதிக்க விரும்பும் சாதனை 


"சொலல்வலன் சோர்விலன் அஞ்சான் அவனை 
இகல்வெல்லல்  யார்க்கும் அரிது "என்பது வள்ளுவர் வாய்மொழி .இந்த உலகில் ஒலி தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்து மொழி தோன்றியது .மொழியே எண்ணங்களை,கருத்துகளை,தொடர்பை வெளிப்படுத்தும் கருவியாகும்.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
 இனிதாவது எங்கும் காணோம் "என்பார் பாரதி.என் வாழ்நாள் பயனாக நான் கருதுவது தமிழை எனது தாய்மொழியாகக் கொண்டதே ஆகும்.எனது மொழி இன்பத்தமிழ் மொழி.கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாதவரையும் தன் பக்கம் ஈர்க்கும் மொழி நம் தமிழ் மொழி .எண்ணற்ற இலக்கண,இலக்கிய வளமுடைய உயர்தனிச் செம்மொழி .என் மொழியில் உள்ள கருத்துக்கள் ஏராளம் ஏராளம் .அதனைப் படித்து படித்தவர்க்கும்,பாமரர்க்கும் செம்மாந்த செய்திகளைக் கூறும் பணியை நான் விரும்புகிறேன்.எதிர்காலத்தில் ஒரு சிறந்த பேச்சாளராகி ,வாய்ப்புறத்  தேனை ஊர்புறத்  தருவேன்.இன்றளவும் கொலை,கொள்ளை,கடத்தல்,கற்பழிப்பு போன்ற சமூக விரோதச் செயல்கள் நடை பெறக் காரணம் நமது நாட்டில் இளைஞர்களுக்கு சமூக அக்கறை,மனிதநேயம் ,வாழ்வியல் முறைகள் தெரியவில்லை. நமகென்ன வந்தது? நாமுண்டு  நம் வீடுண்டு என்றும் ,நமக்கெதற்கு  ஊரைத் திருத்தும் வேலை  என்றும் இருப்பதனால் எடுத்துச் சொல்கின்ற அக்கறை நம்மில் பலருக்கும் குறைந்து விட்டது.இத்தகைய மக்களைத் திருத்தும் பணி காவலருக்கு மட்டுமல்ல ஒரு பேச்சாளருக்கும் உண்டு .ஒரு ஆறடி உயரமுள்ள மனிதனை நான்கு அங்குல நாக்கு கொன்று விடும் என்பது பேச்சின் அருமை. உலகில், வாயில் கூழாங் கற்களைப் போட்டுப் பேசப் பழகிய திக்குவாய் டெமாஷ்தனிஷின் சொற்பொழிவுகள் தான் இன்றைய கிரேக்கத்தின் உயர்ந்த செவ்வியல் இலக்கியங்களாகும்.சிசரோ [CICERO ],செலஷ்ட் [sallust],டேசிட்டஷ் [tacitus ] ஆகியோர்களின் சொற்பொழிவுகள் தான் கி.மு.70 முதல் கி.பி.18 வரை இலத்தின் இலக்கியத்தின் பொற்காலமாக இருக்கிறது.பாரசீகத்தில பிர்தௌசியின் பேச்சும் ;சீனத்தில் கன்பூசியஷின் பேச்சும் வரலாற்றை மாற்றவில்லையா? இயேசுவின் மலைப் பிரசங்கம் கூட மக்களை மாற்றிய மகத்தான பேச்சுதான். 

''ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் 
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு ''
    என்ற செய்தி பேச்சு நஞ்சையும் தரவல்லது நாட்டையும் திருத்த வல்லது என்பதற்கு சான்றாகும்.மொழியே நமக்கு கிடைத்த விழி!நமது மக்களுக்கு பாதை காட்டும் கலங்கரை விளக்கமாக;வாழ்வியல் நெறிகளை எடுத்துச் சொல்கின்ற ஒரு பேச்சாளராகவே எனது விருப்பம்.படிப்பது திருவாசகம் இடிப்பது சிவன் கோவில் என்று கல்வியைக் கற்று பயனற்ற  வாழ்வை வாழ்வதை விட மக்களைத் திருத்தும் சர்ச்சில் போலவோ லெனின் ,ரூசோ போலவோ சிறந்த பேச்சாளராவதே நான் சாதிக்க விரும்பும் சாதனையாகக் கொள்கிறேன் .

பேச்சு புரட்சி உலகின் மூச்சு;அறிவின் உரை வீச்சு.கபிலன் முதல் கலாம் வரை பேசியதெல்லாம் பேச்சு தான்.அறிவின் உரை வீச்சு தான்.புரட்சி உலகின் மூச்சு தான்.
"ஊருக்கு நல்லது சொல்வேன் எனக்கு 
உண்மை தெரிந்து சொல்வேன் " என்பதே எனது வாழ்க்கை அதுவே நான் சாதிக்க விரும்பும்  சாதனை.நன்றி.!



வெள்ளி, 12 ஏப்ரல், 2013

உடல் நலம் செல்வத்தை விட சிறந்தது


உடல் நலம் செல்வத்தை விட சிறந்தது
முன்னுரை:-
“எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்று சொல்வார்கள். எப்படி உடல் முழுமைக்கும் தலை முக்கியமான ஒன்றாக இருக்கிறதோ அது போல தலை முதல் பாதம் வரை சரியாக இயங்கும் உடலும் முக்கியமே மனித உடலே ஓர் இயந்திர அமைப்பு போல செயல் படுகிறது. ஒவ்வொரு உறுப்பும் தனித் தனியாக செய்யும் வேலையை மூளை ஒன்றாக ஒருங்கிணைத்து நம்மை இயக்குகிறது. எனவே உள்ளம் சிறப்பாக அமைய உடல் முக்கியம்.
மனத் தூய்மை:-
“மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்” என்பது திருமூலரின் திருமந்திரப் பாடலாகும். நாம் மனதைத் தூய்மையாக வைத்திருந்தால் அதுவே நாம் செய்யும் எல்லா அறங்களுக்கும் மேலானதாகும். அடுத்தவரை ஏமாற்ற நினைக்காமல், வீணாகப் பொய் சொல்லித் திரியாமல்; பிறர் பொருளை மனதளவும் திருட வேண்டும் என்ற எண்ணம்  இல்லாமல் வாழ்வதே நல வாழ்க்கை. இது மனத் தூய்மை ஆகும். கை ஒன்று செய்ய ;உடம்பு ஒன்றை நாட; பொய் ஒன்றை  நாக்கு பேச;தீயனவற்றைக் கண்டு மனத் தூய்மை இல்லாமல் வெறும் புறத் தூய்மையோடு வாழ்பவர் மனிதர் அல்லர். பாரதி வேண்டியதைப் போல வாக்கினிலே தெளிவும், நினைவு நல்லது  வேண்டும். இவ்வாறு இல்லாமல் தெய்வத்தை வணங்குவது எவ்வகையிலும் ஏற்புடைய செயல் ஆகாது. எல்லா வகையான தூய்மைக்கும் முதலில் மனத் தூய்மை வேண்டும்.நல்ல எண்ணங்கள் இல்லையென்றால் நமக்கு நல்ல பழக்கங்கள் வராது. ஒரு வெற்றியாளனுக்கு உடல் மட்டுமே வெற்றியைத் தருவதில்லை உள்ளத்தின் உயர்ச்சியே வெற்றிக்கனியைப்  பறிக்கச் செய்கிறது. எனவே மன நலமே உடல் நலம் ஆகும்.
உடல் நலம்:-
முறையான உடற் பயிற்சியை நாம் நாள்தோறும் ஐந்து நிமிடங்களாவது செய்யவேண்டும். கை ,கால்களுக்கு வலிமையையும்;கண்களுக்கு சக்தியையும் கொடுப்பது உடற்பயிற்சி ஆகும். நாளை என்று நாம் தள்ளிப் போடும் ஒவ்வொரு நாளும் நாம் இன்றை இழந்து விடுகிறோம்.

“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது 
அதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடு 
நீங்கிப் பிறத்தல் அரிது '' 

என்று ஔவை கூறுவதின் அர்த்தம் நாம் உணர வேண்டும். யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி இவற்றை நாள் தோறும் கடைப் பிடிக்க வேண்டும். செல்வதை இழந்தாலும் பெற்றுக்கொள்ள முடியும் ஆனால் உடல் நலத்தை இழந்து விட்டால் ஒருபோதும் பெற இயலாது. பசியறிந்து உண்டாலே உடலுக்குத் துன்பம் இல்லை. நோயோடு வாழ்ந்து, யாருக்கும் பலனின்றி வீணில் சாவதை விட நோயின்றி வாழ்ந்து வீட்டிற்கும், நாட்டிற்கும் சேவை செய்வதே நமது லட்சியமாக இருக்க வேண்டும்.
முடிவுரை:-
நீண்ட நாட்கள் நாம் உயிர் வாழ நல்லுடம்பு அவசியம். அதற்காக நமக்குத் தெரிந்த உடற்பயிற்சிகள், மூச்சுப் பயிற்சி, யோகப் பயிற்சி ஆகியவற்றைத் தவறாமல் செய்து வந்தால் நோய்  என்பது நம்மை அணுகாது . இத்தகைய நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.  

புதன், 20 பிப்ரவரி, 2013

நான் போற்றிப் பாதுகாக்கும் பொருள்



நான் போற்றிப் பாதுகாக்கும் பொருள்
முன்னுரை :-
"பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள் "என்ற வள்ளுவரின் கூற்று இன்று இத்தலைப்பிற்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.என்னைப் பொருத்தவரை புத்தகமே போற்றிப் பாதுகாக்கக் கூடிய சிறந்த பொருளாகக் கொள்வேன் .நல்ல புத்தகங்கள் நல்ல கனவுகளை வளர்க்கும்.நல்ல கனவுகள் நல்ல எண்ணங்களை உருவாக்கும்.நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களை உண்டாக்கும்.இத்தகைய புத்தகத்தைப் பற்றி இக்கட்டுரை அமைந்துள்ளது.
பொருளுரை :-
                             "படிக்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பது மேல்" என்றான்  பிளாட்டோ . "என்னைச் சிறையில் வைப்பதானால் புத்தகங்கள் நிறைந்த அறையில் சிறை வையுங்கள்" என்றான் இத்தாலிய மேதை மாஜினி ."ஒரு புத்தகசாலைத் திறக்கப் படும்போது ஆயிரம் சிறைச்சாலை மூடப் படுகிறது" என்றார் தாகூர்.இவற்றிலிருந்தும் இன்னும்  பல  சான்றுகள் மூலமும் புத்தகத்தின் மதிப்பும் அவசியமும் நாம் அறியலாம்.பசியோடு இருப்பவனுக்கு மீன் துண்டைக்  கொடுப்பதை விட மீன் தூண்டிலைக் கொடுப்பதே அவன் வாழ்விற்கு வழியாகும் .அதுபோல நாம் எவருக்கேனும் பரிசளிக்க விரும்பினால் நல்ல புத்தகங்களைப் பரிசளிப்பதே சாலச் சிறந்தது.புத்தகம் ஒரு சிறந்த பொழுது போக்கு.ஒரு புத்தகத்தை ஒரு ஆசிரியர் எழுதும் போது அவர் அதுவரை வாழ்ந்த  வாழ்நாள் அனுபவத்தையே எழுதுகிறார்.அதனை நாமும் சொற்பத் தொகை கொடுத்து படித்து அவருடைய உயர்ந்த  அனுபவத்தை பெற்று விடுகிறோம்.என்னைப் பொறுத்தவரை இது பெரிய சுயநலமாக இருந்தாலும் நமக்கும் நம்மைச் சார்ந்தவருக்கும் அந்த அனுபவங்கள் வரங்களாகும்."நூல் பல கல் "என்றார் அவ்வையார் "கற்றது ஒழுகு என்றான்" பாரதி.நமக்கு நல்ல நண்பர்கள் என்பது நாம் வைத்திருக்கும் புத்தகங்களே ஆகும். ஒரு கெட்ட புத்தகம் ஆயிரம் எதிரிகளைவிட  மோசமானது.நாம் கடைகளுக்குச் சென்று திரும்பும் போதும் ;பிறந்தநாள் விழாவிற்கு சென்று திரும்பும் போதும்;இல்ல நிகழ்ச்சிகளுக்கு சென்று திரும்பும் போதும் நாம் கலைப் பொருட்களை வாங்கி வருவதைப் போல நல்ல புத்தகங்களை வாங்கி வரவேண்டும். இல்லங்கள் தோறும் ஒரு நூலகம் அமைத்திட வேண்டும் என்றார் அறிஞர் அண்ணா.பண்டித நேரு அவர்கள் எங்கு சென்றாலும் தன்னுடன் 50 புத்தகங்களை எடுத்துச் செல்வாராம்.அத்தனைப் புத்தகங்களையும் படிக்க முடியுமா ? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் இரசிக்கக் கூடியது."என்னால் எல்லாப் புத்தகங்களையும் படிக்க முடியாமல் போகலாம் ஆனால் எப்போதும் 50 அறிஞர்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்ற பலம் எனக்கு உண்டு"என்றாராம் . 

முடிவுரை :-

ஆங்கில அறிஞர் பேகன் சொல்கிறார் "சில புத்தகங்களைச் சுவைக்க வேண்டும்;சிலவற்றை அப்படியே விழுங்கி விட வேண்டும் ;சில புத்தகங்கை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக அசை போட்டு ஜீரணிக்க வேண்டும்" இவற்றிலிருந்து  புத்தகத்தைக் காட்டிலும் சிறந்த பொருள் வேறு எதுவும் இவ்வுலகில் இல்லை என்பதே நான் அறிந்த உண்மை.புத்தகங்களை நேசிப்போம்;வாசிப்போம்;யாசிப்போம்.