சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்

படி;படை;பயன்படு

புதன், 22 டிசம்பர், 2010

பெருந்தலைவர்

கண்ணதாசன்


வெள்ளி, 10 டிசம்பர், 2010

தமிழ் வளர்த்த பெரியோர்கள்- (மு. வரதராசனார் )



மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) 20ம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.
இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன்,மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.

வாழ்க்கைச் சுருக்கம்
மு.வரதராசனார், தமிழ்நாடு, வட ஆற்காடு மாவட்டம், திருப்பத்தூரில் வேலம் என்னும் சிறிய கிராமத்தில் முனுசாமி முதலியார் - அம்மாக்கண்ணு தம்பதிக்கு பிறந்தார். திருவேங்கடம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாலும் தாத்தாவின் பெயரான வரதராசன் என்ற பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.

மு.வ. வின் இளமை வாழ்வும் தொடக்கக் கல்வியும் வேலம் என்னும் சிறிய கிராமத்துடன் இயைந்து வளர்ந்தது. உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் கற்றுத் தேர்ந்தார். பதினாறு வயதில் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். 1928ம் ஆண்டில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் சில காலம் எழுத்தராகப் பணியாற்றினார்.

எழுத்தராகப் பணியாற்றிய போது உடல் நலம் குன்றியதால் அந்தப் பணியிலிருந்து விடுபட்டு ஓய்வுக்காக கிராமத்துக்குச் சென்று, அங்கு திருப்பத்தூர் முருகைய முதலியார் என்பவரிடம் தமிழ் கற்கத் தொடங்கினார்.

தமிழின் மீதிருந்த பற்றால் 1931 இல் வித்வான் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் தாமே பயின்று 1935 இல் வித்வான் தேர்வு எழுதி, அதில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்றார். இதற்காக திருப்பனந்தாள் மடம் ரூ.1000 பரிசளித்தது.

1935 ஆம் ஆண்டு தம் மாமன் மகளான ராதா அம்மையாரை மணந்தார். இவர்களுக்கு திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகிய ஆண் மக்கள் பிறந்தனர். 1935 முதல் 1938 வரை திருப்பத்தூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1939ல் பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார்.

பேராசிரியராகப் பணி
1939 ஆம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரி விரிவுரையாளர் பணி நிமித்தம் சென்னை சென்ற மு.வ. அக் கல்லூரியின் "கீழ்த்திசை மொழிகளில் விரிவுரையாளர்" என்ற பொறுப்பை ஏற்றார். 1944 இல் "தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற தலைப்பில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார்.
1948 இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மூலம் "சங்க இலக்கியத்தில் இயற்கை" என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் முதல் முதலாக தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் மு.வ. என்பது குறிப்பிடத்தக்கது.
1939 இல் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த மு.வ. 1961 வரை அங்கு பணியாற்றினார். 1945 இல் அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ஆனார். இடையே ஓராண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1961 முதல் 1971 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
பின்னர் 1971 இல் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்று 1974 வரை சிறப்புறப் பணியாற்றினார்.

மு.வ., சென்னை, திருப்பதி, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களின் செனட் உறுப்பினர் பதவி வகித்துள்ளார். கேரள, மைசூர், உஸ்மானியா, பெங்களூர், ஆந்திர, தில்லி, மதுரை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் கல்வி வாரிய உறுப்பினர் பதவிகளையும் வகித்துள்ளார். 1972 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஊஸ்டர் கல்லூரி இவருக்கு இலக்கியப் பேரறிஞர் (டி.லிட்) என்ற சிறப்புப் பட்டத்தை நல்கிப் பெருமைப்படுத்தியது. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் டி.லிட். என்னும் சிறப்புப் பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் மு.வ. அவர்களே.

சாகித்ய அகாதெமி,பாரதிய ஞானபீடம், தேசியப் புத்தகக் குழு, இந்திய மொழிக் குழு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம்-தமிழ் அகராதிக் குழு, நாட்டுப்புறப்பாடல்களும் நடனங்களும் பற்றிய குழு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணைக்குழு, ஆந்திரப்பிரதேச அரசுப்பணியாளர் தேர்வாணைக்குழு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைக்குழு, தமிழ்நாடு புத்தக வெளியீட்டுக் கழகம், ஆட்சிமொழிக்குழு, ஆட்சி மொழி சட்டக்குழு, தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ்க்கலை மன்றம், தமிழிசைச் சங்கம், மாநில வரலாற்றுக் கழகம், தமிழ் கலைக் களஞ்சியம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் அங்கம் வகித்ததோடு அனைத்திலும் தன்னுடைய பணி முத்திரைகளைப் பதித்த தனிச் சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் மு.வ. அவர்கள்.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

எழுத்துப் பணி
நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் நூல்கள், நாடகங்கள், , கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரை என 85 நூல்களை தமிழுக்குத் தந்துள்ளார். பெர்னாட்ஷா, திரு.வி.க., காந்தியடிகள், இரவீந்திரநாத் தாகூர் ஆகியோரது வாழ்க்கை வரலாறுகளை நூல்களாக வடித்துள்ளார்.
இவரது திருக்குறள் தெளிவுரையை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியிட்டுள்ளது.
1944ம் ஆண்டு மு.வ. எழுதிய "செந்தாமரை" நாவலை வெளியிட யாரும் முன்வராததால், அந்நாவலை அவரே வெளியிட்டார்.
மு.வ.எழுதிய நூல்களில் கி.பி. 2000 (சிந்தனைக் கதை) ஒரு தனிச் சிறப்புடையது. இதில் மு.வ.வின் இன்றைய நினைவும், நாளைய கனவும் உள்ளன. சிந்தனையும் கற்பனையும் இயைந்து இந்நூலை நடத்திச் செல்வதால் இதனைச் சிந்தனைக்கதை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விருதுகள்
மு.வ.வின் அகல்விளக்கு எனும் நாவலுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது. கள்ளோ காவியமோ, அரசியல் அலைகள், மொழியியல் கட்டுரைகள் ஆகிய மூன்று நூல்களுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்தது. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், மொழிநூல், கள்ளோ காவியமோ. அரசியல் அலைகள், விடுதலையா, ஓவச் செய்தி ஆகிய ஆறு நூல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பத்திரங்களைப் பெற்றன. பல நூல்கள், ஆங்கிலம், இந்தி, மராத்தி, ரஷ்ய மொழி, சிங்கள மொழி, தெலுங்கு மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
மு.வ.வைப் பற்றி ஆர்.மோகன் முதன் முதலில் "மு.வ.வின் நாவல்கள்" என்ற நூலை 1972ல் எழுதியுள்ளார். மேலும் இரா.மோகன் மு.வ.வைப் பற்றி 5 நூல்கள் எழுதியுள்ளார்.


நன்றி :தமிழ் தாயகம் குழுமம் 

சனி, 4 டிசம்பர், 2010

'விரும்பு'

  'விரும்பு' முன்னேற்ற வாழ்வின் அடிக்கரும்பு

 மாணவக் கண்மணிகளே! பள்ளி வாழ்வில், நீங்கள் படித்த வரி ஔவைப் பாட்டியின் 'அறம் செய விரும்பு'. ஏன் விரும்ப வேண்டும்? விரும்புவதை, நம்  உடலில் உள்ள நரம்புகள் மூளைக்கு எடுத்து செல்கின்றன. மூளை அச்செய்திகளை நிறைவேற்ற புலன்களை, மூளை எனும் பேழையில் நாம் 
சேகரித்துள்ள அறிவைப் பயன்படுத்துகிறது. இப்படி நாம்  விரும்புவது நடைபெறுகிறது. நாம் விரும்பாத செயல்கள் நடைபெறுவதில்லை. ஏன்?
நமக்கு அறுவை சிகிச்சையின்போது, நமக்கு வலி தெரியாமல் இருக்க,மூளைக்கு செய்திகள் அனுப்பும் நரம்பின் மீது மருந்தை செலுத்துகிறார்கள்.
அதனால் மூளைக்குச் செய்திகள் அறுவை சிகிச்சை செய்யும் பகுதியிலிருந்து வருவதில்லை. அதனால் வலியை நாம் உணர்வதில்லை.
(தகவல் சுஜாதா.தலைமைச்செயலகம்)  இதே போல் நாம் விரும்பாத செய்திகள் நம் மூளையை எட்டுவதில்லை. மாணவர்களே! படிப்பது எனக்குப் பிடிக்காது,கடினமானது என்றெல்லாம் சொல்லாதீர்கள். அந்த எண்ணங்கள் உங்கள் மூளையில் படிந்து படிக்க முடியாமல் போய் விடும். அதனால் படிப்பதை விரும்பு . வாழ்கை இனிக்கும் கரும்பாக மாறும்.

நன்றி
திருமதி.சௌமியா,
தமிழ்த்துறை.


 

வெள்ளி, 26 நவம்பர், 2010

கவிதைகள்

கவிதைகள்
தாத்தா
தாத்தா நீங்கள் ஓர் அற்புத பிறவி
"தா,தா" என்று கேட்ட போது வாரி வாரி வழங்கினீர்
அம்மா திட்டியபோது என்னைச் செல்லமாக வருடினீர்
குழந்தையாய் இருந்த போது என் புன்சிரிப்பை ரசித்தீர்
தூக்கம் வந்தபோது குட்டிக் கதை ஒன்று கூறினீர்
பயம் கவ்விக்கொண்ட போது கடவுளைக் காட்டினீர்
அன்பான புன்னகையை உங்களிடம் கண்டேன்
அளவில்லா பாசத்தை உங்களிடம் கண்டேன்
அசையாத நம்பிக்கையை உங்களிடம் கண்டேன்
அப்பாவின் மறு உருவத்தை உங்களிடம் கண்டேன்
நீங்கள் ஒரு சொக்கத்தங்கம்; எனக்குக் கடவுள் தந்த அற்புத பரிசு

பூ
மல்லிகைப்பூ
தாமரைப்பூ
ரோஜாப்பூ
அன்பு
பண்பு
நட்பு
என்ற பல பூக்கள் இப்புவியில் குவிந்து கிடந்தாலும்
பலரிடையே சிரிப்பு என்னும் பூ மட்டும் காணவில்லை ...

மரம்
கண்ணிற்குக் குளிர்ச்சியூட்டும் பசுமையைத் தந்தாய்
நாவிற்குச் சுவைதரும் கனிகளைத் தந்தாய்
சுவாசத்திற்கு இன்றியமையாத காற்றைத் தந்தாய்
தேகத்திற்கு இதமான நிழலைத் தந்தாய்
மனதிற்கு புத்துணர்ச்சியூட்டும் பூக்களைத் தந்தாய்
மருத்துவ குணம் நிறைந்த இலைகளைத் தந்தாய்
ஆனால், ஈவிரக்கமில்லா மனிதனோ உனக்கு அழிவைத் தான் தந்தான்...
மழை
மேகப்புற்றின் கண்ணீராய் நீ பிறந்தாய்
மலைகளோடு உறவாடி அருவியாய் நீ தவழ்ந்தாய்
நதிகளின் நாயகனாய் நீ ஓடி விளையாடினாய்
காற்றோடு கைகோர்த்து நீ மழலைக் கூச்சல் போட்டாய்
தாகத்தைத் தணிக்கும் தண்ணீரை நீ வழங்கினாய்
கருணையோடு விவசாயத்திற்கு சேவைகள் பல ஆற்றினாய்
மரம், செடி, கொடிகளின் அருமை தோழனாய் நீ திகழ்ந்தாய்
நெடுதூர பயணத்தின் பின் கடலோடு ஒன்றினாய்
ஏனோ தெரியவில்லை சில நேரங்களில் மட்டும் புவிக்கு வர மறுக்கிறாய்...
கைத்தொலைப்பேசி
நானோ உனக்கு சார்ஜ் செய்து உயிர் கொடுத்தேன்
நீயோ கதிர்வீச்சால் என் உயிரை பறித்துவிட்டாய்...

.வை. மனிஷா
10 - ஜே

புதன், 24 நவம்பர், 2010

தமிழோடு விளையாடு !

தலைவியைச்  சந்திக்க காத்திருக்கிறான்
தலைவன் .தாமதமாக வந்த அவள் சொன்னாள்:

''வெட்டியதால் சாகவில்லை.
வெட்டாதிருந்தால் செத்திருப்பேன்.
செத்ததால் சாகவில்லை.
சாகாதிருந்தால் செத்திருப்பேன்.''

தலைவனுக்கு ஒன்றும் புரியவில்லை.அவள் விளக்கம் சொன்னாள்:
வரும் வழியில் இருட்டில் பாழும்கிணறு ஒன்று இருந்தது தெரியவில்லை.
அப்போது மின்னல் வெட்டியதால் நான் விழாமல் தப்பித்தேன்.சாகவில்லை.மின்னல் வெட்டாதிருந்தால்நான் செத்திருப்பேன்.
சிறிது தூரம் வந்தபின் ஒரு பாம்பை மிதித்து விட்டேன்.நல்ல வேளை.அது ஒரு செத்த பாம்பு.அதனால் நான் சாகவில்லை.அது சாகாதிருந்தால் நான்செத்திருப்பேன்.

Join Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamil
 


ஒரு முறை கம்பரும்,சோழ மன்னரும் மாலை நேரத்தில் சோலையில் உலாவிக் கொண்டிருந்தனர்.அருகே ஓடிக் கொண்டிருந்த ஆற்று நீர் காலில் படும்படி இருவரும் நடந்து கொண்டிருந்தனர்.நீர் வேட்கை கொண்ட கம்பர்,அந்த ஆற்றின் தெள்ளிய நீரைக் கையில் அள்ளிக் குடித்தார்.இதைக் கண்ட மன்னர்,கம்பரை மட்டம் தட்ட எண்ணி,''கம்பரே,என் காலில் விழுந்த நீரைத் தானே நீர் குடித்தீர்?''என்று கிண்டலாகக் கேட்டார்.அதற்கு கம்பர்,'நீரே காலில் விழுந்தால் நான் என்ன செய்வது?'என்று பதிலுரைத்தார்.

Join Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamil

முக்காலைக் கைப்பிடித்து,மூவிரண்டு போகையிலே
அக்காலை ஐந்து தலை நாகம் அழுந்தக் கடித்தால் பதூரதன்
புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் கால் வாங்கத் தேய்.

இதன் பொருள்:
முக்காலைக் கைப்பிடித்து =இரண்டு கால்கள் பற்றாமல் மூன்றாவது காலாகக்
கைத்தடி ஊன்றி
மூவிரண்டு போகையிலே =(மூவிரண்டு=ஆறு) வழிநடக்கும் போது
அக்காலை
ஐந்து தலை நாகம்=நெருஞ்சி முள்
அழுந்தக் கடித்தால்=காலில் தைத்தால்
பதூரதன் புத்திரன்=தசரதனின் மகன் ராமன்
மித்திரன்=நண்பன் (ராமனின் நண்பன் சுக்ரீவன்)
சத்துருவின்=எதிரியின்(
சுக்ரீவனின் 
எதிரி வாலி)
பத்தினியின்=மனைவியின்(வாலியின் மனைவி தாரை)
கால் வாங்கத் தேய்=(தாரை என்ற வார்த்தையில் காலைஎடுத்தால்,தரை)
தரையில் தேய்.
அதாவது காலில் நெருஞ்சி முள் குத்தினால் ,காலைத் தரையில் தேய்க்க வேண்டும். 

Join Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamil

பத்துக்கால்  மூன்று  தலை
பார்க்கும் கண்  ஆறு முகம்
இத்தலையில் ஆறு வாய்.
ஈரிரண்டாம் -இத்தனையும்
ஓரிடத்தில்  கண்டேன்!.
உவந்தேன்!களி கூர்ந்தேன்!
யாரிடத்தில் கண்டேன்,பகர்.
                 இப்பாடல் வயலில் உழுது கொண்டிருந்த விவசாயியைப் பார்த்துப் பாடப்பட்டது.
பொருள்: உழுது கொண்டிருந்த இரண்டு மாட்டுக்கும் எட்டு  கால்;உழவனுக்கு 
இரண்டு கால்;மொத்தம் பத்து கால்.
மாடுகளின் தலை இரண்டு;உழவனின் தலை ஒன்று;மொத்தம் மூன்று தலை.ஆறு கண்கள்.
மாடுகளின் முகம் இரண்டு;உழவனின் முகம் ஒன்று;அப்போது வெயில் ஏறும் நேரம்,எனவே ஏறுமுகம் ஒன்று;ஏர் முகம் ஒன்று;உழுகிற கொழுமுகம் ஒன்று;ஆக மொத்தம் ஆறு முகம்.
மாடுகளின் வாய் இரண்டு;உழவனின் வாய் ஒன்று;கொழு வாய் (கலப்பை நுனி ) ஒன்று ;மொத்தம் நான்கு வாய்.(ஈரிரண்டுநான்கு) 

Join Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamil

மார்கழிக் குளிரில் புலவர் ஒருவர் நடுங்கியபடி அமர்ந்திருந்தார்.அப்போது இன்னொரு புலவர் சால்வையுடன் வந்தார்.முதல் புலவர் சொன்னார்,''பனிக்  காலம் கொடியது,''இரண்டாவது புலவர் சொன்னார்,'பனிக்காலம் நன்று.'

முதல்  புலவர் சற்று யோசித்து,''ஆமாம்,..பனிக்காலம் நன்று,'என்றார். அருகில்  இருந்தவருக்கு ஒரே குழப்பம்.முதல் புலவர் தன கருத்தை வேகமாக மாற்றிக்  கொண்டதற்கான காரணத்தை வினவினார்.அவர் சொன்னார்,'இருவரும் ஒரே கருத்து தான் கொண்டிருக்கிறோம்.'

அருகில் இருந்தவருக்கோ குழப்பம் அதிகரித்தது.குறிப்பறிந்து முதல் புலவர் சொன்னார்,''நான்பனிக்காலம் கொடியது என்றேன்.அவர் பனிக்கு ஆலம் நன்று என்றார்.ஆலம் என்றால் விஷம்.அதாவதுபனியைக் காட்டிலும் விஷம் பரவாயில்லைஎன்கிறார்.அவ்வளவு பனிக்கொடுமை.'' 

சனி, 20 நவம்பர், 2010

சுரதா




Join Only-for-tamil
இந்த யுகத்தின் சிறந்த கவிஞரான "சுரதா'வை அறியாதவர்கள் இருக்க முடியாது.மரபில் தோய்ந்தவர்களாக இருந்தாலும் சரி, புதுக்கவிதைப் படைப்பாளிகளாக இருந்தாலும் சரி, உவமைக் கவிஞரின் கவிதைகளில் ஒரு கவிதையையாவது ரசிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். மனதில் தனக்குச் சரியெனப்பட்டதை பளிச்சென்று வெளியிடும் துணிவு மிக்கவர்.

கவிஞர் சுரதா, தஞ்சை மாவட்டத்துப் பழையனூரில், திருவேங்கடம்-சண்பகம் தம்பதிக்கு 1921-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி பிறந்தார். இயற்பெயர் இராசகோபாலன். பெரும்பாலும் கவிஞர்கள் பிறரைப் பின்பற்றி எழுதும் வழக்கமுடையவர்கள். அதை சுரதா விரும்பாதவர். "அந்த நிழல் வழி வாசலை விட்டு நீங்கி எழுதும் கவிஞன் நான். இவரையோ, அவரையோ பின்பற்றி எழுதப் பிரியப்படாதவன்" என்று மார்தட்டிக் கொள்வதில் தவறில்லை என்பதை நிரூபித்தவர்.

ராஜகோபாலன், "சுரதா' ஆன வரலாறு சுவை மிக்கது. ராஜகோபாலன், பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கவிதை நூல்களை விரும்பிப் படிப்பாராம். ஒருமுறை, டீக்கடைக்காரர் ஒருவர், பாரதிதாசன் கவிதைப் புத்தகம் ஒன்றைக் கொடுத்துப் படிக்கச்சொன்னார். அந்தக் கணம் முதல் பாரதிதாசனின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். புதுவைக்குச் சென்று, பாரதிதாசனைச் சந்திக்கும் துடிப்பு ஏற்பட்டது. செல்வதற்குப் பணம் வேண்டுமே...? ஒரு வீட்டுக்குச் சுண்ணாம்பு பூசும் வேலை செய்து ஆறணா கூலி பெற்று, பாரதிதாசனார் வீட்டை அடைந்தார். இளைஞர் ராஜகோபாலனின் வேட்கையை அறிந்த பாரதிதாசன், பெற்றோருக்குத் தெரிவிக்காமல் தன்னைக் காண வந்ததறிந்து, ""பெற்றோரின் அனுமதி பெற்றுப் பிறகு வா! என்னுடன் பல நாள் தங்கலாம்'' என்று வலியுறுத்தி, அவருக்குச் சிறு தொகையும் கொடுத்து அனுப்பி வைத்தார்."இவரன்றோ பண்பு மிக்க கவிஞர்' என்று முடிவு செய்து, அந்தக் கணம் முதல் பாரதிதாசனுக்கு அடிமையானார். 1941-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி முதல் பாவேந்தரது தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. பாரதிதாசனாரின் இயற்பெயர் சுப்புரத்தினம். அதனால், "சுப்புரத்தினதாசன்' என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். கடிதம் எழுதிக் கையெழுத்திடும்போது இட வசதிக்காக "சு ர தா' என்று இடம்விட்டு எழுதுவார். அந்த மூன்று எழுத்துகளே "சுரதா' ஆனது.

சுரதாவின் முதல் கவிதை "கவி அமரன்', "பிரசண்ட விகடன்' இதழில் வெளிவந்தது. பல ஆண்டுகள், பாரதிதாசனின் வீட்டிலேயே தங்கியிருந்து அவரது எழுத்துப் பணிகளுக்கு உதவியாக இருந்தார். நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளையுடன் பல மாதங்கள் தங்கியிருந்து அவரது எழுத்துப் பணிகளுக்கும் உதவியாக இருந்தார்."உவமைக் கவிஞர்" என்று மக்கள் அளித்த விருது அவரிடம் பிரிக்க முடியாமல் ஒட்டிக்கொண்டது. தன்னைப்போன்று "உவமை கொட்டி" எழுதுபவரை ஆதரித்தாரா இல்லையா என்பது தெரியாது. ஆனால், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கவியரங்க நிகழ்ச்சிகளுக்குத் தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கவிஞர்கள், இவர் தலைமையில் பாடியிருக்கிறார்கள். உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையைத் தொடங்கிய இவர், தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிலும் புதுமை, புரட்சி செய்வதில் நாட்டம் கொண்ட சுரதா, வீட்டுக்கு வீடு கவியரங்கம், முழுநிலாக் கவியரங்கம், படகுக் கவியரங்கம், ஆற்றுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம் எனப் பல்வேறு கவியரங்க நிகழ்ச்சிகளை நடத்தி, இளங்கவிஞர்களை ஊக்குவித்துள்ளார்.

சுரதாவின் கொள்கைகள் வித்தியாசமானவை. ஆனால் அழுத்தமானவை. "கணக்கைப் போன்றதே கவிதை என்பதால், கவிதை புனைந்திடக் கற்பனை வேண்டும் என்னும் கருத்தை ஏற்பதே இல்லை'' என்று அவர் தம் கவிதை ஒன்றில் கூறுவதற்கும் துணிவு வேண்டும். புகழைத் தேடி அவர் சென்றதில்லை; அவரைத் தேடித் தேடிப் புகழ் வந்தது. அறிஞர் வ.ரா.வை முதன் முதலில் சந்தித்தபோது கவிதை ஒன்றைப் பாடுங்கள் என்று வ.ரா. சொல்ல, உவமைக் கவிஞரின் கவிதையைக் கேட்டவுடன், ""மற்றொரு பாரதி பிறந்து விட்டான்'' என்று பலர் முன்னிலையில் மனமாரப் பாராட்டியிருக்கிறார். "சிவாஜி' ஆசிரியர் திருலோக சீதாராம், தம் இதழில் உவமைக் கவிஞரின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டிருக்கிறார். முரசொலி நாளிதழும் சுரதாவின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1944-ஆம் ஆண்டு "மங்கையர்க்கரசி' என்ற திரைப்படத்துக்கு சுரதா முதன் முதலில் வசனம் எழுதிக்கொடுத்தார். மிகக் குறைந்த வயதில் திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் "சுரதா' என்றே கூறலாம். சுரதாவின் வசனங்கள் மிகவும் புகழ் பெற்றவை. திரைப்படங்கள் பலவற்றில் சுரதாவின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஜெனோவா, நாடோடி மன்னன், அமரகவி, தை பிறந்தால் வழி பிறக்கும், தலை கொடுத்தான் தம்பி, நீர்க்குமிழி, மறக்க முடியுமா, நேற்று இன்று நாளை முதலிய படங்களின் பாடல்கள் என்றுமே மறக்க முடியாதவை. எழுதாமல் இருப்பவர்களைப் பார்த்தாலும், எழுதிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தாலும் "எழுதுக! எழுதுக! இன்னும் எழுதுக! விழுதின் ஆலமரம்போல் விரிந்து பரவும் பான்மையில் எழுதுக'' என்று ஊக்கப்படுத்துவார்.

"மங்கையர்க்கரசி' வசனம் மிகவும் புகழ் பெறவே, அதை நூலாக வெளியிட்டார். திரைப்பட உரையாடல் (வசனம்) கதைப் புத்தகமாக முதன் முதலில் வெளிவந்தது கவிஞர் சுரதா எழுதியதே. 1946-இல் "சாவின் முத்தம்' என்ற நூலை எழுதினார். வி.ஆர்.எம்.செட்டியார் அதை வெளியிட்டார். 1955-இல் "பட்டத்தரசி' என்ற சிறு காவிய நூல் வெளிவந்தது. சுரதா, "உவமைக் கவிஞர்' என்ற புகழ் பெற்றவுடன், "காவியம்' என்ற பெயரில் கவிதை வார இதழ் ஒன்றைத் தொடங்கினார். முதன் முதலில் கவிதையிலேயே வார இதழ் நடத்தியவர் என்ற பெருமையும் பெற்றார். பிறகு, "இலக்கியம்', "ஊர்வலம்', "விண்மீன்' எனப் பல இலக்கிய ஏடுகளை நடத்தினார். வெள்ளையாம்பட்டு சுந்தரம், சுரதாவின் "தேன் மழை' என்ற கவிதை நூலை வெளியிட்டார். அதற்குத் தமிழக அரசு 1969-ஆம் ஆண்டு பரிசளித்தது. ஆனந்த விகடனில் வாரம்தோறும் கவிதைகள் எழுதினார். திரைப்பட நடிகைகளைப் பற்றி அவர் எழுதியது பலருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அதற்கு சமாதானமான பதிலைச் சாதுர்யமாக அளித்திருக்கிறார்.

1972-ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றம் பெருமை பெற்றது. 1982-இல் எம்.ஜி.ஆர்., பாவேந்தர் விருதும், பத்தாயிரம் ரூபாயும், தங்கப்பதக்கமும் வழங்கிச் சிறப்பித்தார். 1990-இல் இன்றைய தமிழக முதல்வர், பாவேந்தர் விருது வழங்கிச் சிறப்பித்தார். 1995-இல் அன்றைய தமிழக முதல்வரான ஜெயலலிதாவால், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் "இராஜராஜன்' விருது வழங்கப்பட்டது.


20-க்கும் மேற்பட்ட கதை, கவிதை, கட்டுரை நூல்களும் 100-க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களும், நான்கு திரைப்படங்களுக்கு வசனமும் எழுதிப் புகழைச் சேர்த்துக்கொண்டார். சுரதா, தன் சகோதரியின் மகள் சுலோசனாவை மணந்தார். அவர்களுக்கு ஒரு மகன். பெயர் கல்லாடன்.
ஒழுக்க சீலரும், வாழ்க்கைநெறியைச் சற்றும் மீறாதவருமான கவிஞர் சுரதா, 2006-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி நள்ளிரவு காலமானார்.

மணிவிழா, பவழவிழா, முத்துவிழா கண்ட உவமைக் கவிஞர் 85 ஆண்டுகள் தன் கவிதையின் வலிமையால், நல்ல நண்பர்களின் நட்பால் உயிர் வாழ்ந்தவர். தமிழ் உள்ளவரை வாழ்வார்."உண்மையில் அவர் மறையவில்லை; உவமைகள் உள்ளவரையில் வாழ்வார்'' என்று எழுதிய கவிஞர் சுரதாவின் கவிதையும் அழியாது.



நன்றி :தமிழ் குழுமம் 

வெள்ளி, 12 நவம்பர், 2010

பிரகதீஸ்வரம் - அதுவே விஸ்வரூபம்


தஞ்சைப் பெரிய கோவில், ராஜராஜேஸ்வரம், தென் மேரு எனச் சிறப்பித்துக் கூறப்படும் தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோவிலின் ஆயிரமாம் ஆண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
 தமிழகச்  சிற்பக்கலையின் அதிசயம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதான பொறியியலின் மகத்துவம் இவற்றையெல்லாம் தனது மாபெரும் கனவாகிய இந்தக் கோவிலின் கட்டுமானம் மூலம் நிரூபித்த மன்னன் அருண்மொழி என்கின்ற ராஜராஜ சோழன்.
இந்த விழாவையொட்டி தினமலரின் சிறப்புமலரில் மாபெரும் இலக்கியப் படைப்பாளி, சிறந்த நாவலாசிரியர் திரு. பாலகுமாரன் அவர்கள் அளித்த  சிறப்புக் கட்டுரையை இங்கே உங்களுக்காகத் தருவதில் மகிழ்ச்சி.
இனி அவரது விளக்கம் வருமாறு:
யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.

திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.

எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து.

வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு.  உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.

எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு.

மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.

கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.

விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.

இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு!' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும்.

நன்றி :நாவல்பக்கம் ஜகந்நாதன்
 வெல்க தமிழ்

தமிழர்கள் இரண்டு பேர் சந்தித்தால் தயவு செய்து தமிழில் மட்டும் பேசுங்கள்

பாரதி என்றவொரு "தீ"

தமிழ் மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பெரியோர்கள் பலர். பல்வேறு துறைகளில் தமிழ் மொழி முன்னேற பாடு பட்ட இப்பெரியோர்களைப்   பற்றி நண்பர்கள் தெரிந்துகொள்ள இணையதளத்திலிருந்து தகவல் தொகுப்புகளை தர விரும்புகின்றேன்.

முதலில் பாரதியார் பற்றிய தொகுப்பு இது

Join Only-for-tamil   Join Only-for-tamil
சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.

தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது


வாழ்க்கைக் குறிப்பு
1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்படும் நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொள்கின்றார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் செல்கின்றார். 1898 முதல் 1902 வரைகாசியில் தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னனால் அழைத்து வரப்பட்டு காசி அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். இவ்வாறு ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்த பாரதி 1904 ஆம் ஆண்டு மதுரையில் அவர் எழுதும் பாடல் 'விவேகபானு' இதழில் வெளியாகின்றது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

இலக்கியப் பணி
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி      - பாரதி.

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி


தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என கவிபுணைந்த கவிஞாயிறு. சம்ஸ்க்ருதம், வங்காளம், ஹிந்தி, ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழ்மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மாமேதை. தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழின் தன்னிகரற்ற கவியேறு.

    * குயில் பாட்டு
    * கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன்                                                  மீது   பாடிய பாடல்களின்
                                         தொகுப்பாகும்.
   * பாஞ்சாலி சபதம்

ஆகியன அவர் படைப்புகளில் சில.


பத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும்
பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இத்ழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.


தேசியக் கவி
விடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.

தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில்பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.

புதுக்கவிதைப் புலவன்
பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவனுக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புணைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையை தமிழுக்குத் தந்தவன்.

பெண்ணுரிமைப் போராளி
தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினான். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான். பெண்களின் கல்வியறிவுகாகவும் சட்டங்களை செய்திடவும் கனவுகண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டான்.

பாஞ்சாலி சபதம்
இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.

பாரதியார் நினவுச் சின்னங்கள்
தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு  இல்லமாகவும்,சென்னை  திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 11-12-1999 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. 25 சதுர அடி பரப்பளவில் 1000 நபர்கள் அமரக்கூடிய அளவில் திறந்தவெளிக் கலையரங்கம் உள்ளது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.

(நன்றி:விக்கிபீடியா)

தமிழர்கள் இரண்டு பேர் சந்தித்தால் தயவு செய்து தமிழில் மட்டும் பேசுங்கள்
சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும்-என் 
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்

 

இராஜராஜ சோழனும் கடல்வழித் திறமையும்


 இதன் மூலம் இராஜராஜனின் போர்த்திறன் வெளிப்படுகிறது. காந்தளூர் என்னும் துறைமுகத்தில் சேரர்களின் (பாஸ்கர் ரவி வர்மன் திருவடி) கப்பல்களை அழித்ததாகக் குறிப்பிடும் இவ்வரிகளிலிருந்து, சோழ கப்பற்படை நன்கே இருந்தது எனக் கொள்ள்லாம். அதே போல ஸ்ரீலங்காவின் மீது 993(கி.பி)-ஆம் ஆண்டில் படையெடுத்து அதன் வடபுறத்தினைக் கைப்பற்றி அந்த இடத்திற்கு மும்முடி சோழ மண்டலம்’  எனப் பெயரிட்டதும், இராஜராஜனின் கடற்படைத் திறனைக் காட்டுகிறது. தனது ஆட்சிக் காலத்திலேயே ஸ்ரீலங்கவை முழுவதுமாக வென்று, பின்னர் வெங்கி நாட்டையும் தனதாக்கிக் கொண்டு அதைச் சக்திவர்மனுக்கு ஆட்சி புரிய அளித்தான். கடற்படையில் சிறந்திருந்த போதும், இராஜராஜன், அப்படையை எந்நாட்டையும் அழிக்கப் பயன்படுத்தவில்லை.            


சைலேந்திரர்களுடன் அவனது உறவு குறிப்பிடப்படவேண்டியது. ஏனெனில் சரித்திரரீதியாக நாம் அறிந்து கொள்வதெல்லாம் சைலேந்திரர்கள் குறிப்புகள் மூலமே! சுமத்ராவிலும் இன்றைய மலேசியாவிலுமிருந்து தான் நமக்கு அதிகமான சான்றுகள் கிடைக்கின்றன. அவற்றிலிருந்தே, அதாவது, அவை அங்கு கிடைப்பதிலிருந்தே, இராஜராஜனின் பெருமை அறியப்படலாம். அங்கு கிடைக்கும் பல சான்றுகளினின்றும் சைலேந்திர நாட்டு சூளாமணிவர்மன் அவனது மகனான விஜயோத்துங்கவர்மன் (1003-1005) ஆட்சியிலும் இராஜராஜனின் உறவு அந்நாட்டினுடன் மிக நன்றாகவே இருந்திருக்கிற தென்பதைத் தெரிந்து கொள்கிறோம். ராஜேந்திரன் காலத்தில் தான் கடற்படை ஆக்ரமிப்புக்குப் பயன் படுத்தப்பட்டது. இராஜராஜனின் கப்பல்கள் மாலத்தீவுக்குச் சென்று அங்கு 10,000 தீவுகளைக் கைப்பற்றியதாகவும் தெரிகிறது.
அதே போல சீன நாட்டிலிருந்தும் பல சான்றுகள் நமக்குக் கிடைத்துள்ளன.

இப்போது அதற்கான சான்றுகள் ஒன்றும் இல்லையெனினும், நாகபட்டினம்தான் சோழர்களின் முக்கியமான துறைமுகமாக இருந்தது. அப்போதைய சோழ நாட்டு மாலுமிகள் கடல்வழிப் பயணத்தை நன்கே அறிந்து வைத்திருந்தனர். ஆருத்ரா தரிசனம் முடிந்தவுடன்தான் அவர்களது கடல்வழிப் பயணம் ஆரம்பமாகும். தை மாத ஆரம்பத்தில் வடக்கிலிருந்து வங்காள விரிகுடாவில் கடல் நீரில் தெற்கு நோக்கி ஓட்டம் இருக்கும் அதைப் பயன்படுத்திக் கொண்டு, (அந்த நீரோட்டத்திற்கு வடக்கன் என்று பெயர்) கப்பல்கள் வெகு சுலபமாகத் தெற்கு நோக்கிப் பயணிக்கும். (ஆகையால் தான் தை பிறந்தால் வழி பிறக்கும்’  என்ற பழமொழி உண்டானதாக நான் நம்புகிறேன்.) அப்படிச் செல்லும் கப்பல்கள் ஸ்ரீலங்காவின் கிழக்குக் கரையிலுள்ள அக்கரைபட்டினம் என்ற ஊரை அடையும். அப்போது காற்று கிழக்கு நோக்கி வீசும். அதைப் பயன்படுத்திக் கொண்டு கப்பல்கள் கிழக்குத் தீவுகளை அடையும். இதை நன்கு அறிந்திருந்தவர்கள் இராஜராஜ சோழன் காலத்து மாலுமிகள். இராஜேந்திரன் இந்தத் திறமையை சீர் செய்து இன்னும் கப்பல்கள் செல்வதைப் பெருக்கினான். ஆனால் அவ்வழிகளை அமைத்துக் கொடுத்தது இராஜராஜன்தான். அதற்கு முன்னர் கலிங்கர்களும், குஜராத்தியர்களும் அறிந்திருந்தனர்! இருந்தாலும் அதை முறையாகப் பயன்படுத்தியது இராஜராஜன்தான் என்றால் மிகையாகாது!

தவிரவும் இராஜராஜன் காலத்தில்தான், வணிகக் குழுக்கள் கீழை நாடுகளுக்குச் சென்று தமது வணிகக் கூடங்களை நிறுவியது. அப்போது தான், பல நாடுகளினின்று வந்த வணிகர்களும்கூடி வணிகத்தை முழுமையாக பன்னாட்டு நிறுவனமாக மாற்றினர். ஆகையால், வணிகத்தை நாடு கடந்து சிறப்பாக நடப்பதற்கு வழிவகுத்துக் கொடுத்ததில் இராஜராஜனின் பங்கு அதிகம் இருந்தது எனக் கொள்ளலாம்.
முக்கியமாக, நாடு கடந்து அச்சமின்றி வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு நம் வணிகர்கள் தமது வணிகத்தை நிலைநிறுத்தினது மட்டுமன்றி, அரசு மாறினாலும் அதனால் அவர்களுக்கு ஒருவிதக் குறையுமின்றி வணிகம் நடத்துவதற்கு உண்டான உபாயங்களையும் செய்து கொடுத்த மன்னன் இராஜராஜன் என்று கூறலாம்!
வெல்க தமிழ்



நன்றி :தமிழ் குழுமம்