சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்

படி;படை;பயன்படு

வியாழன், 1 நவம்பர், 2012

ஆசிரியர் போற்றுதும்

எடுத்துச் சொல்ல எவருமின்றி 
எழுந்து நடந்தவன் யாரிங்கே ?
அகரம் பழக்கும் கைகளின்றேல் 
ஆயுதம் முளைக்கும் பாரிங்கே 

கருவறை கழிந்து வகுப்பறை பயின்ற 
ஒருவரை உலகம் மதிக்கும் --சொல்லிக் 
கொடுப்பவர் என்ற துடுப்புகள் இன்றேல் 
தலைமுறை எப்படிச் சிறக்கும்.

ஆயுதம் தொடங்கி காகிதம் வரைக்கும் 
செய்கின்ற வேலை எதற்கும் -ஓர் 
ஆசான்  இன்றேல் ஆக்கங்கள் இல்லை 
என்பதை உலகம் உரைக்கும் 

எழுத்தறி வித்தே எழுத்தறி வித்தே 
உலர்ந்து போன மையா ?-நீங்கள் 
எழுத்தறி விக்காமல் நாங்கள் வந்தோம் 
என்ப தென்ன மெய்யா?

அரசன் என்றாலும் அரிசன் என்றாலும் 
சமநீதி உங்கள் சபையில் !-எந்த 
வர்க்க மூலத்தையும் சரிசம மாக்கும்
சமநீதி உங்கள் கையில் !

வகுப்பு வாதமும் வகுப்பு பேதமும் 
வந்து குவிகின்ற  நாட்டில் ! -உங்கள் 
வகுப்பு வாதமும் இலாத பேதமும் 
வகுத்துக் காட்டியது வாழ்க்கை 

கத்தி கொண்டே காயம் ஆற்றும் 
மருத்துவன் வேலை அய்யா !-நீங்கள் 
கத்திக் கொண்டே புத்தி புகட்டி 
கண்களைத் திறந்தது  பொய்யா ? 

வன்முறை தொலைத்து நன்முறை பிறக்க 
வாத்தியார் அய்யா வேண்டும் 
எழுத்தறி வித்த இறைவா உங்கள் 
பழுத்தறிவு என்றும் வேண்டும் !

மரத் தமிழனாக மாறுவோம்



முகவுரை :-

”நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்

 கலந்த மயக்கம் உலகம்”                                        [தொல்காப்பியம் மரபியல் 91 ]
ஐந்து பூதங்களால் ஆன உலகில் இயற்கையோடு இயைந்த வாழ்வை நடத்திய தமிழினம்; இன்று இயற்கையை மறந்து செயற்கைக் கொடி பிடித்து வளம் வருகிறது. ஞாயிறு போற்றி, திங்களைப் போற்றி, மாமழை போற்றி வாழ்ந்த தமிழினம்; பெட்ரோல் போற்றி, டீசல் போற்றி, அமில மழை போற்றி வாழ்கிறது. இந்த ஆண்டை சர்வதேசக் காடுகள் ஆண்டாக கொண்டாட வேண்டிய அவலம் வந்து விட்டது. நமக்கும் சுற்றுச் சூழலுக்கும் என்ன தொடர்பு? என்று கேட்பீர்களானால் அதனைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம் .




கருத்துரை:-


"புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்..." [ மாணிக்க வாசகர் ] என்ற வரிகளை கவனிப்போம். முதல் தாவர  உயிரியான அமீபா முதல் படிப்படியான பரிணாம வளர்ச்சியாலே மனிதன் என்ற நிலை வந்துள்ளோம்.


நாம் அறிவு பெற்றது எப்படி? என்பதை சிந்தித்து பார்த்தால் கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தொல்காப்பியம் இவ்வாறு வரையறுக்கிறது.

"ஒன்றறிவதுவே உற்றறிவதுவே 

.........................................
ஆற்றறிவதுவே அவற்றொடு மனனே.." 

உற்று அறியும் அறிவு புல்,மரம் ஆகியவற்றிற்கு உண்டு. இந்த ஐந்தறிவின் அடிப்படை, தாவரங்கள்.  ஆனால் இன்று ஆறாம் அறிவை மறந்து நாம்  அழிக்கின்ற நிலையில் இருக்கிறோம் .

ஐந்தறிவும் ஐந்து பூதங்களால் ஆளப்படுகிறது

நிலம் -- தொடுதல் 
நீர் --- சுவைத்தல் 
காற்று -- சுவாசித்தல்  


நெருப்பு -- வெப்பம்

ஆகாயம் -- கேட்பது
 இவ்வாறான இயற்கையை அழிப்பது நம்மை நாமே அழிப்பது போலாகும்.  உலகின் இன்றைய மக்கள்தொகை [7,076,194,423] பில்லியன் [01/11/2012 வரை ]. இவர்கள் எல்லோருக்கும் உணவு, உடை, உறைவிடம், காற்று வேண்டுமானால் எத்தனை உற்பத்தி நிகழ வேண்டும்?  எத்தனை காடுகள் அழிக்கப் பட்டிருக்கும்? இன்றளவும் தேவையான தண்ணீர், காற்று, எரிபொருள் எல்லாம் சுரண்டி நாம் எடுத்துக் கொண்டு இருக்கிறோம். காடுகள் அழிக்கப் படுவதால் புவி வெப்பமாதல், மழையின்மை, பருவகால மாற்றம், சுனாமி முதலானவை தோன்றுகின்றன. வழக்கமாக, வேடந்தாங்கலுக்கு டிசம்பரில் வரவேண்டிய வெளிநாட்டுப் பறவைகள் இப்பொழுதே வரத்தொடங்கி விட்டதும் பருவ மாற்றத்திற்கு சான்றாகும். மழை பொய்த்தாலும், அதிக வெப்பமும் காடுகளை அழித்ததால் வந்த கேடுகள் ஆகும். காட்டில் உள்ள விலங்குகளை வேட்டையாடியதால் காடுகள் பாதுகாப்பற்று எவராலும்  அழிக்கப்படும் நிலையில் உள்ளன. காடுகள் இல்லையேல் மழை இல்லை; மழை இல்லையேல் கடலும் இல்லை. புல், பூண்டுகள் இல்லாமல் எல்லா உயிரினங்களும் அழியும் காலத்தை நோக்கி நாம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த 'டி.ஆர்.மால்தஸ்' என்பவரின் மக்கள் தொகைக் கோட்பாட்டை நினைவு கூர்வது நல்லது. " மக்கள் தொகை பெருக்கல் விகிதத்தில் போய்க்கொண்டிருக்கிறது; உணவு உற்பத்தி கூட்டல் விகிதத்தில் போய்க்கொண்டிருக்கிறது. இவ்வாறாகச் சென்றால் உணவு, நீர், காற்று பற்றாக்குறை மற்றும் சமூகச் சீர்கேடு, சுகாதாரக் குறைபாடு, வேலையின்மை முதலானவை ஏற்படும்" என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இன்று நிலத்தடி நீர் மட்டம் குறைந்து காற்று,நீர், ஒலிமாசடைந்து போய்விட்டது.

"காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்


கடலும் மலையும் எங்கள் கூட்டம்;


நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;


நோக்க நோக்கக் களியாட்டம்." [ஜய பேரிகை--பாரதி] என்ற பாரதியின் வரிகளில் குருவியினத்திற்கும் கைபேசி அலைகளால்  அழிவு வந்து விட்டது; மலைகளைப் பெயர்த்து மனிதன் குடியேறி விடுகிறான்; நோக்கும் திசையெல்லாம் மனிதத்தலைகளின்றி வேறில்லை என்றே சொல்லியாக வேண்டும் .

முடிவுரை:- 


நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
குறள் 17: 
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும்.தான் சுற்றுப்புறத்தை கவனிக்காத எந்த நாடும், எந்தச் சமுதாயமும் உயராது .

காடுகளை அழித்து நாடாக்கிக் கொண்டிருந்தால் நாடே அழிந்து காடாக மாறும் என்பதை மறந்து விடக் கூடாது. மறத் தமிழனாக இருந்த நாம் இனி மரத் தமிழனாக மாறுவோம். மரங்களை நட்டு காடுகளைக்  காப்போம் .