சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்

படி;படை;பயன்படு

புதன், 20 பிப்ரவரி, 2013

நான் போற்றிப் பாதுகாக்கும் பொருள்



நான் போற்றிப் பாதுகாக்கும் பொருள்
முன்னுரை :-
"பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள் "என்ற வள்ளுவரின் கூற்று இன்று இத்தலைப்பிற்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.என்னைப் பொருத்தவரை புத்தகமே போற்றிப் பாதுகாக்கக் கூடிய சிறந்த பொருளாகக் கொள்வேன் .நல்ல புத்தகங்கள் நல்ல கனவுகளை வளர்க்கும்.நல்ல கனவுகள் நல்ல எண்ணங்களை உருவாக்கும்.நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களை உண்டாக்கும்.இத்தகைய புத்தகத்தைப் பற்றி இக்கட்டுரை அமைந்துள்ளது.
பொருளுரை :-
                             "படிக்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பது மேல்" என்றான்  பிளாட்டோ . "என்னைச் சிறையில் வைப்பதானால் புத்தகங்கள் நிறைந்த அறையில் சிறை வையுங்கள்" என்றான் இத்தாலிய மேதை மாஜினி ."ஒரு புத்தகசாலைத் திறக்கப் படும்போது ஆயிரம் சிறைச்சாலை மூடப் படுகிறது" என்றார் தாகூர்.இவற்றிலிருந்தும் இன்னும்  பல  சான்றுகள் மூலமும் புத்தகத்தின் மதிப்பும் அவசியமும் நாம் அறியலாம்.பசியோடு இருப்பவனுக்கு மீன் துண்டைக்  கொடுப்பதை விட மீன் தூண்டிலைக் கொடுப்பதே அவன் வாழ்விற்கு வழியாகும் .அதுபோல நாம் எவருக்கேனும் பரிசளிக்க விரும்பினால் நல்ல புத்தகங்களைப் பரிசளிப்பதே சாலச் சிறந்தது.புத்தகம் ஒரு சிறந்த பொழுது போக்கு.ஒரு புத்தகத்தை ஒரு ஆசிரியர் எழுதும் போது அவர் அதுவரை வாழ்ந்த  வாழ்நாள் அனுபவத்தையே எழுதுகிறார்.அதனை நாமும் சொற்பத் தொகை கொடுத்து படித்து அவருடைய உயர்ந்த  அனுபவத்தை பெற்று விடுகிறோம்.என்னைப் பொறுத்தவரை இது பெரிய சுயநலமாக இருந்தாலும் நமக்கும் நம்மைச் சார்ந்தவருக்கும் அந்த அனுபவங்கள் வரங்களாகும்."நூல் பல கல் "என்றார் அவ்வையார் "கற்றது ஒழுகு என்றான்" பாரதி.நமக்கு நல்ல நண்பர்கள் என்பது நாம் வைத்திருக்கும் புத்தகங்களே ஆகும். ஒரு கெட்ட புத்தகம் ஆயிரம் எதிரிகளைவிட  மோசமானது.நாம் கடைகளுக்குச் சென்று திரும்பும் போதும் ;பிறந்தநாள் விழாவிற்கு சென்று திரும்பும் போதும்;இல்ல நிகழ்ச்சிகளுக்கு சென்று திரும்பும் போதும் நாம் கலைப் பொருட்களை வாங்கி வருவதைப் போல நல்ல புத்தகங்களை வாங்கி வரவேண்டும். இல்லங்கள் தோறும் ஒரு நூலகம் அமைத்திட வேண்டும் என்றார் அறிஞர் அண்ணா.பண்டித நேரு அவர்கள் எங்கு சென்றாலும் தன்னுடன் 50 புத்தகங்களை எடுத்துச் செல்வாராம்.அத்தனைப் புத்தகங்களையும் படிக்க முடியுமா ? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் இரசிக்கக் கூடியது."என்னால் எல்லாப் புத்தகங்களையும் படிக்க முடியாமல் போகலாம் ஆனால் எப்போதும் 50 அறிஞர்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்ற பலம் எனக்கு உண்டு"என்றாராம் . 

முடிவுரை :-

ஆங்கில அறிஞர் பேகன் சொல்கிறார் "சில புத்தகங்களைச் சுவைக்க வேண்டும்;சிலவற்றை அப்படியே விழுங்கி விட வேண்டும் ;சில புத்தகங்கை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக அசை போட்டு ஜீரணிக்க வேண்டும்" இவற்றிலிருந்து  புத்தகத்தைக் காட்டிலும் சிறந்த பொருள் வேறு எதுவும் இவ்வுலகில் இல்லை என்பதே நான் அறிந்த உண்மை.புத்தகங்களை நேசிப்போம்;வாசிப்போம்;யாசிப்போம்.