சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்

படி;படை;பயன்படு

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

உடல் நலம் செல்வத்தை விட சிறந்தது


உடல் நலம் செல்வத்தை விட சிறந்தது
முன்னுரை:-
“எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்று சொல்வார்கள். எப்படி உடல் முழுமைக்கும் தலை முக்கியமான ஒன்றாக இருக்கிறதோ அது போல தலை முதல் பாதம் வரை சரியாக இயங்கும் உடலும் முக்கியமே மனித உடலே ஓர் இயந்திர அமைப்பு போல செயல் படுகிறது. ஒவ்வொரு உறுப்பும் தனித் தனியாக செய்யும் வேலையை மூளை ஒன்றாக ஒருங்கிணைத்து நம்மை இயக்குகிறது. எனவே உள்ளம் சிறப்பாக அமைய உடல் முக்கியம்.
மனத் தூய்மை:-
“மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்” என்பது திருமூலரின் திருமந்திரப் பாடலாகும். நாம் மனதைத் தூய்மையாக வைத்திருந்தால் அதுவே நாம் செய்யும் எல்லா அறங்களுக்கும் மேலானதாகும். அடுத்தவரை ஏமாற்ற நினைக்காமல், வீணாகப் பொய் சொல்லித் திரியாமல்; பிறர் பொருளை மனதளவும் திருட வேண்டும் என்ற எண்ணம்  இல்லாமல் வாழ்வதே நல வாழ்க்கை. இது மனத் தூய்மை ஆகும். கை ஒன்று செய்ய ;உடம்பு ஒன்றை நாட; பொய் ஒன்றை  நாக்கு பேச;தீயனவற்றைக் கண்டு மனத் தூய்மை இல்லாமல் வெறும் புறத் தூய்மையோடு வாழ்பவர் மனிதர் அல்லர். பாரதி வேண்டியதைப் போல வாக்கினிலே தெளிவும், நினைவு நல்லது  வேண்டும். இவ்வாறு இல்லாமல் தெய்வத்தை வணங்குவது எவ்வகையிலும் ஏற்புடைய செயல் ஆகாது. எல்லா வகையான தூய்மைக்கும் முதலில் மனத் தூய்மை வேண்டும்.நல்ல எண்ணங்கள் இல்லையென்றால் நமக்கு நல்ல பழக்கங்கள் வராது. ஒரு வெற்றியாளனுக்கு உடல் மட்டுமே வெற்றியைத் தருவதில்லை உள்ளத்தின் உயர்ச்சியே வெற்றிக்கனியைப்  பறிக்கச் செய்கிறது. எனவே மன நலமே உடல் நலம் ஆகும்.
உடல் நலம்:-
முறையான உடற் பயிற்சியை நாம் நாள்தோறும் ஐந்து நிமிடங்களாவது செய்யவேண்டும். கை ,கால்களுக்கு வலிமையையும்;கண்களுக்கு சக்தியையும் கொடுப்பது உடற்பயிற்சி ஆகும். நாளை என்று நாம் தள்ளிப் போடும் ஒவ்வொரு நாளும் நாம் இன்றை இழந்து விடுகிறோம்.

“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது 
அதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடு 
நீங்கிப் பிறத்தல் அரிது '' 

என்று ஔவை கூறுவதின் அர்த்தம் நாம் உணர வேண்டும். யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி இவற்றை நாள் தோறும் கடைப் பிடிக்க வேண்டும். செல்வதை இழந்தாலும் பெற்றுக்கொள்ள முடியும் ஆனால் உடல் நலத்தை இழந்து விட்டால் ஒருபோதும் பெற இயலாது. பசியறிந்து உண்டாலே உடலுக்குத் துன்பம் இல்லை. நோயோடு வாழ்ந்து, யாருக்கும் பலனின்றி வீணில் சாவதை விட நோயின்றி வாழ்ந்து வீட்டிற்கும், நாட்டிற்கும் சேவை செய்வதே நமது லட்சியமாக இருக்க வேண்டும்.
முடிவுரை:-
நீண்ட நாட்கள் நாம் உயிர் வாழ நல்லுடம்பு அவசியம். அதற்காக நமக்குத் தெரிந்த உடற்பயிற்சிகள், மூச்சுப் பயிற்சி, யோகப் பயிற்சி ஆகியவற்றைத் தவறாமல் செய்து வந்தால் நோய்  என்பது நம்மை அணுகாது . இத்தகைய நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக